பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்277


முதல் குத்துபா ஓதித்தொழுகை புரிந்தார்

இறைவனின் புகழே பாடி ஈரேழு நாள்கள் தங்கி
முறையுடன் பள்ளி வாசல் முதலவர் கட்டி வைத்தார்
நிறைபனு சாலிம் என்னும் நேரிடம் அடைந்தார் ஆங்கே
குறையில் குத்துபாவும் ஓதிக் குளிர்மனத் தொழுகை செய்தார். 47

மதினா விழாக் கோலம் பூண்டது

வள்ளலார் வரப் போகின்ற வான்செய்தி மதினா ஊரில்
உள்ளவர்க் கெல்லாம் எட்ட ஊரினுள் உவகை தோன்றித்
துள்ளலும் தூய வாழ்த்தின் தோற்றமும் ஊக்கம் என்னும்
வெள்ளமும் பெருகி ஓட விழாக் கோலம் பூண்ட தாங்கே! 48

முகம்மதுவை ஆர்வத்தோடு எதிர்பார்த்தனர்

வான்முகில் நிழலைக் கண்டோர் வள்ளல்தாம் வந்தார் என்றார்
தேன்இசைத் தென்றல் கேட்டுத் திருக்குர்ஆன் என்றே மாந்தார்
மான்மத மணந்தான் என்று மலர்மணம் மாற்றிச் சொன்னார்
வான்முகில் உருவமெல்லாம் வானவர் எனவும் சொன்னார். 49

குழந்தைகளின் நிலை

பெரியவர் களுக்கே இந்தப் பேதைமை விரிந்த தென்றால்
சிறியவர் நிலைமை ஈங்குச் செப்பவா வேண்டும் அன்புக்
குரியதம் பெற்றோ ரையோ உற்றோர்கள் மற்றோரையோ
விரிஒலி மழலைச் சேய்கள் விரும்பவே இல்லை அந்நாள்; 50

அனைவரும் தெருவையே நோக்கி இருந்தனர்

ஒருவரும் வீட்டுள் இல்லை உணர்வுகள் நெஞ்சுள் இல்லை
வரும்வரும் என்று வான மழைவர வதனைக் காணும்
பெருநன்செய் நிலத்தைப் போலப் பெருமக்கள் நெஞ்சை விட்டுத்
தெருவரும் உருவை நாடித் தேடியே போன தாலே! 51

உயிரையே எதிர்பாத்திருந்தனர்

வானைவிட் டிறங்கி விட்டால் வழிந்தோடும் வெள்ளம் போலத்
தேனைவிட் டிறங்கி வந்த திருமொழி நபியார் என்னும்
கோனைவிட் டகலா நல்லோர் குழுமியே வரவும் தங்கள்
ஊனைவிட்(டு) ஆவி முன்னே ஒளிர்வதாய் எண்ணிப் பார்த்தார். 52