பக்கம் எண் :

278துரை-மாலிறையன்

கண்டவர் உருகினர்

பார்வையால் விழுங் குதல்போல் பார்த்தனர் சில்லோர் மெய்யின்
வேர்வையால் கூட உள்ளம் விழைகின்ற மணம்கொண்டாரின்
நீர்மையால் மகிழ்ந்து கண்டு நெருங்கினோர் பல்லோர் நெஞ்சின்
நேர்மையார் இவரே என்று நெகிழ்ந்தனர் உருகி நின்றோர்; 53

முகம்மது நபி வந்து தோன்றினார்

பொழிகின்ற அன்பி னாரின் பொன்மனச் சிறப்பை எண்ணி
எழில்நின்ற கலிமா தந்த இதயத்தால் பெருமான் ஆங்கே
வழிகின்ற அருள்கொண் டானை வாழ்த்தியே வருகை தந்து
தொழில் நின்ற மக்கள் முன்னே தோன்றியே நன்றி சொன்னார். 54

மதினா புனிதம் ஆனது

வந்தாரை வானச் சீரை வரவேற்ற மதினா மக்கள்
செந்தாழை முகத்தைக் கண்டு சிந்தனை பொருத்தி வைத்து
“நந்தாச்சீர் திங்கள் போன்று நல்கொளி முகத்தோய்! தாங்கள்
வந்ததால் மதினா இவ்வூர் வான்புகழ் பெற்ற தையா!” 55

தாங்கள் எங்கள் இல்லம் வருக

தங்களின் திருப்பாதத்தில் தங்கிட விருப்பம் கொண்டோம்
எங்களின் இல்லம் போந்தே இருந்திட வேண்டும் என்று
திங்களைச் சுற்றிச் சுற்றித் திகழ்ந்திடும் உடுக்கூட்டம் போல்
அங்குளம் விரும்பி மக்கள் அனைவரும் நெருங்கிக் கேட்டார்; 56

எல்லாம் இறைவனின் வீடே

ஆரிடம் தங்கப் போவேன்? அனைவரும் அன்புள்ளீர்கள்
சேரிடம் வந்து சேர்ந்தேன் சிறப்பிடம் தருகின் றீர்கள்
ஊரிடம் வந்தேன் உங்கள் உளங்களில் நிரம்பி உள்ளேன்
பாரிடம் எல்லாம் நந்தம் பரமனின் இடமே யாகும். 57

யார் வீட்டில் தங்குவது?

ஆயினும் அன்பர் உங்கள் ஆர்வத்தைக் காட்டுகின்றீர்
தாயினும் பரிவு காட்டும் தன்மையால் எவர்தம் வீட்டில்
போய்முனம் தங்க வேண்டும் பொருந்தவே என்று நானே
வாயினால் சொன்னால் நீங்கள் வருந்துவீர்; அதனால் அன்பீர்; 58