பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்279


ஒட்டகம் காட்டும் வீட்டில்

ஏறிநான் வந்த தான இனியதாம் ஒட்டகத்தைக்
கூறியான் விடுக்க வில்லை கொண்டஇக் கயிற்றை விட்டேன்
நேரில்இவ் ஒட்டகம் போய் நிலைத்தெவர் வீட்டைக் காட்டிக்
கூறுமோ அவர்தம் வீடே கோட்டையாய் மதித்துச் செல்வேன். 59

அனைவரும் எதிர்பார்த்தனர்

முக்கோடிக் குரிய தான முழுப்பரி செமக்கே என்று
புக்கோடிச் சீட்டு வாங்கிப் பொன்னாளை எதிர்பார்ப்பார்போல்
தக்கோரின் வருகை யாலே தம்குடி பொலியும் எண்ணம்
மிக்கோர்கள் தங்கள் தங்கள் வீட்டின்முன் வாயில் பார்த்தார்; 60

ஒட்டகம் அபூஅய்யூப்பின் வீட்டைக் காட்டியது

ஆடியும் அசைந்தும் மெல்ல ஆயிடம் விலங்கு சென்று
கூடியும் நின்றும் பக்கம் குறுகியும் நகர்ந்தும் வீட்டை
நாடியும் நடந்தும் பின்னர் நல்லவர் அபூஅய் யூப்பின்
மாடியும் உடைய வீட்டை மதித்துநேர் நின்ற போதில்; 61

மக்கள் அபூஅய்யூப்பை வாழ்த்தினர்

பொருளல்லார் தமையும் நல்ல பொருளாக மதிக்கச் செய்யும்
பொருளினைப் பெற்றார் போல்மெய்ப் பொருள்பெற்றார் அபூஅய் யூப்பென்(று)
ஒருவியப் பெய்தி நின்ற ஊருளார் எல்லாம் கூடி
அருள்பெற்றார் என்றே கூறி அகவாழ்த்தைத் தெரிவித்தார்கள். 62

கம்மது அவ்வீட்டில் தங்கினார்

குடிசையைக் கூடாரத்தைக் கொழுமாடி வீட்டினையும்
முடிசெயும் மன்னர் வாழும் முழுமணிக் கோயிலையும்
அடிவைக்கும் மண்ணை யும்தாம் அவனிடம் என்றே எண்ணும்
முடிவைத்தான் கொண்டிருக்கும் முகம்மது வீட்டுள் சென்றார். 63

ஏழுதிங்கள் தங்கினார்

திங்கள்ஏழு அந்த வீட்டில் திருத்தூதர் குறையில் லாமல்
தங்கிய நாளில் அன்பே தாங்கிய அபூஅய் யூப்பே
அங்கையன் இருந்த நாள்கள் அனைத்துமே திருநாள் ஆகச்
செங்கையால் சுவை கனிந்த செழுவிருந் தளித்துக் காத்தார். 64

***