பக்கம் எண் :

280துரை-மாலிறையன்

4. கபுகாபு கண்டு கண்குளிர்ந்த படலம்

அம்மாறு, சிறுவனோடு வந்தார்

அரியவன் நெறியைக் கூறும் ஆற்றலார் அபூஅய் யூப்பின்
விரிமனை தங்கி நல்ல விருந்தினை உண்ணும் நாளில்
உரியஅன் புக்குத் தம்மை ஒப்படைத்தவர் அம்மாறு
கரியஓர் சிறுவன் தன்னைக் கையொடு கூட்டி வந்தார். 1

இருவரும் மகிழ்ந்து வந்தனர்

நெஞ்செலாம் அன்பே கொண்ட நெடியவர் தாமும் அந்தப்
பிஞ்செனும் சிறுவன் தானும் பெருமானின் பாதம் தொட்டு
மிஞ்சொளி உடைய கண்ணில் மேவியே ஒற்றிக் கொண்டு
மஞ்சுசூழ் நிழற்கண் நெஞ்சு மகிழ்ந்துநேர் நிற்கும் போதே; 2

இந்தச் சிறியவர் யார்?

ஒளிச்சுடர் வேந்தர் அம்மா(று) உளம்கொள நோக்கி, “அன்ப!
வெளிச்சுடர் அதனைப் போல விழைமனச் சுடரும் கொண்டு
தெளிவுற நிற்கும் இந்தச் செம்மையார் யார்? பேர்என்ன?
அளியவர் பெற்றோர் யாவர்? அறிவிப்பீர்” என்று கேட்டார்; 3

நான் திருக்குர்ஆன் ஓதி இருந்தேன்

பாங்கெழில் உளத்தீர்! வானோன் பகர்திருக்குர்ஆன் தன்னை
ஈங்குநான் ஓதித் தங்கள் எழிற்புகழ் நினையும் ஓர்நாள்
ஆங்கிவர் வந்தார்; ஓதும் அன்புரை கேட்டுக் கேட்டுத்
தீங்கெலாம் நீங்கி னார்போல் தென்புகொண்டு என்முன் தோன்றி; 4

முகம்மது என்போர் யார்?

“அருட்புகழ் நெறியே ஓதும் அன்பரே! நீவிர் கூறும்
பொருள்மிகும் நபியார் மற்றும் பொன்முகம்மதுவென் கின்ற
அரும்பெயர் எல்லாம் தங்கட்(கு) அருளினார் யாவர்? இப்பேர்
தரும்என்றன் தந்தை போலத் தாங்கள்தந் தீரோ?” என்றார். 5