என் அப்பாவும் அப்பெயரைக் கூறினாரே!
“அற்றவர் துன்பம் நீக்கும் அரும்பெயர் உற்ற நல்லார்
வற்றிய நெஞ்சம் பூக்க வையத்தில் வந்துள் ளாரா?
நற்றவத்தாரைத் தங்கள் நல்விழி கண்ட துண்டா?
கற்றவா! கூறு” கென்று காலைக்கும் பிட்டுக் கேட்டார். 6
“நான் அவர் தொண்டன்” என்றேன்
“கண்டனன் கடவுள் அன்பைக் கனிவுடன் அன்ன வர்தம்
தொண்டர்க்கும் தொண்ட னாகத் தொடர்பணி செய்வேன்” என்று
விண்டதோ மெதுவாகத் தான் விரைந்தவர் என்கால் வீழ்ந்து
மண்தவத் தீரே! என்று மலர்வாயால் முத்தம் வைத்தார். 7
அன்பினாரைக் கூட்டி வந்தேன்
“இத்துணை அன்பி னாரின் இயல்பினை எண்ணித் தங்கள்
முத்தொளிர் முகத்து முன்னர் முனைவரைக் கொணர்ந்தேன்” என்றார்
அத்தனார் இதனைக் கேட்டும் அகமிகக் குளிர்ந்தும் ஆங்கண்
சொத்தென நின்றிருந்த சுடர்முகத் தானைக் கண்டே; 8
திருக்குர்ஆனை விரும்பும் நீ யார் தம்பி?
கனிமுதிர் சோலை போலக் காட்சியே தரும்நல் லன்ப!
நனிமகிழ் வோடு வானம் நல்கிய திருக்குர் ஆனை
இனியதீங் கருப்பஞ் சாற்றின் இயல்பெனச் சுவைத்தாய்; நீயார்?
தனியனா? அன்றித் தந்தை தாயுளார் சேயோ? என்றார். 9
கபுகாபு என்பேர்
“எந்தையும் தாயும் இந்த எழில்மதி னாவாழ் யூதர்
சிந்தையால் செழித்த தந்தை செந்தமிழ் மொழிபோல் மண்ணில்
முந்திய மொழிகற் றுள்ள முனைவராம் கபுகாபு என்பேர்
விந்தைஒன் றில்லாப் பையன் விரும்பியே வந்தேன்” என்றான்; 10
பெற்றோர் பேரிட்டுப் பேணி வளர்த்தார்
ஆர்வமாய்க் கேட்ட மேலோர் அகத்தினை உணர்ந்த சேயோன்
“நீர் வளக் கருணை கொண்டீர்! நெஞ்சினால் உவந்து பெற்றுப்
பேர்வைத்தும் பெருமைப் பட்டும் பெறுநலம் யாவும் தந்தும்
ஊர்வைத்துப் புகழப் பெற்றோர் உரியன யாவும் செய்தார். 11
|