எங்கள் வீட்டில் நிறையப் பொத்தகங்கள் உள்ளன
கல்வியும் கலைக ளோடு கனியவே என்னை ஓம்பிப்
பல்வகை நலமும் செய்தார் படித்தவர் எங்கள் முன்னோர்
நல்வகை நூல்கள் உண்மை நவின்றிடும் பொத்தகங்கள்
சொல்வளம் மிகுந்த மூன்று சுடர்மறை எல்லாம் கொண்டார்; 12
பலபெட்டிகளுள் ஒன்றை மட்டும் வெறுத்தனர்
பெட்டிபன் னூறில் இந்தப் பெருநலப் பனுவல் எல்லாம்
கட்டிவைத் திருக்கக் கண்டேன் கண்டதை எடுப்பேன் கையால்
தொட்டுவைத் தினிப்பேன் நெஞ்சில் தோன்றினால் படிப்பேன் ஆனால்
பெட்டிஒன் றதனை மட்டும் பெற்றவர் வெறுத்தல் கண்டேன். 13
ஏன் இந்தப் பெட்டியை வெறுக்கிறீர்?
இத்தனை பெட்டி எல்லாம் எடுத்தெனைப் பார்க்கச் சொல்வீர்
சொத்தினை வைத்துள்ளீரோ? சொல்லுங்கள் அப்பா! காணும்
அத்தனிப் பெட்டி உள்ளே அரியதுஏ தேனும் உண்டோ?
வைத்தவர் நீர்கூடக்கை வைத்ததே இலையே” என்றேன். 14
நபி ஒருவர் பிறப்பாராம்
“பொன்மணி ஒன்று மில்லை புதல்வாஅப் பெட்டிக்குள்ளே
நன்மனி தர்கள் தோன்றும் நமதருங் குலத்தைப் போற்றும்
பன்மணி மறைநூல் ஒன்று படித்தவர் வைத்துள்ளார்கள்
பின்மணி மக்கா வூரில் பிறப்பான் ஓர் நபியே” என்றும்; 15
நம் மறையினை மாற்றிச் சொல்வான்
இறையவன் தூதன் தானே இனியவன் எவர்க்கும் நன்மை
நிறையவே செய்வேன் வானில் நிலைத்தசீர் இறைவன் அல்லா
ஒருவனே உருவம் இல்லான் ஒளியவன் என்றும் நந்தம்
மறையினை மாற்றிச் சொல்லும் மனிதனைப் பற்றி யுள்ள; 16
அதனுள் இருக்கும் நூலைப் படித்து வீணாகாதே
நூலது முடித்து வைத்தார் நுண்ணியோய்! அதனைப் பார்த்து
நாளது வீணாக் காதே நன்மையை நாடுகென்று
பாலது புகட்டு தல்போல் பலப்பல எடுத்துச் சொல்லச்
சூலது பெற்ற தாயும் சொல்லினார் தந்தை போலே; 17
|