பெட்டியைத் திறந்து நூலை எடுத்தேன்
‘தொட்டிட வேண்டா’ என்று சொல்வது நெருப்பானாலும்
சுட்டிடக் கையால் பிள்ளை தொடுவதும் இயல்பே அன்றோ?
பெட்டியுள் உள்ள அன்பு பேசிடும் பனுவல் தன்னை
ஒட்டியோர் இல்லாப் போதில் ஒளிந்துநான் எடுத்துப் பார்த்தேன்; 18
நற்றவ முகம்மது பேரைக் கண்டேன்
பெற்றவர் சொன்ன தைப்போல் பெட்டியுள் நூலும் பார்த்தேன்
அற்றவர் நாம் இம் மண்ணில் அனைவரும் வணங்கு தற்கே
உற்றவன் ஒருவன் அல்லா ஒளியவன் இறுதித் தூதர்
நற்றவ முகம்மதென்னும் நல்லுரை அதனைக் கண்டேன். 19
என்நிலை கண்ட பெற்றோர் திகைத்தனர்
முகம்மது முகம்மதென்றே முழுவதும் சொல்லிச் சொல்லி
அகமதில் மகிழ்ச்சி தானே அடங்காத நிலைய னாகிப்
பகர்வதும் திசையை நோக்கிப் பணிவதும் ஆகி விட்டேன்
திகைத்தவர் என்றன் பெற்றோர் தீராத கவலை கொண்டார்; 20
அந்தப் பேரையே உச்சரித்து வந்தேன்
“நோய்பிடித் தேனே” என்று நுவன்றனர் ஒரு சாரார்கள்
பேய்பிடித் ததுவே என்றும் பேசினார் மற்றோர் சாரார்
தாய்பிடித் தாலும் பெற்ற தந்தையே பிடித்தால் கூட
வாய்பிடித் தந்தப் பேரே வாடாமல் சொல்லி வந்தேன். 21
இந்த நாய்க்கு நல்லபாடம் கற்பிக்க வேண்டும்
“நோய்பிடித் திடவும் இல்லை நோக்காடும் ஏதுமில்லை
வாய்க்கொழுப்” பென்று கூறி வருத்தினர் சிலபேர்; இந்த
நாய்க்குநாம் தகுந்த பாடம் நல்கினால் சரியாம்” என்றார்
சேய்க்குநாம் செல்லம் தந்த சிறுமையால்” என்றார் எந்தை; 22
கொடுமை மாய்க்க வந்தவர் இவரே
குடியினில் ஆழ்ந்த தந்தை கூடிய பொழுதில் ஓர்நாள்
“நெடியவர் நபிக ளாரே நேர்முறை உணர்ந்த செம்மல்
கொடியவர் மரபை மாய்க்கக் கோமகன் அன்பு வள்ளல்
அடியவன் ஆனேன்” என்றே அறிவித்தேன் அன்னவர்க்கே; 23
|