சிரித்தாரா? எரித்தாரா? தெரியவில்லை
எரிப்பது போல என்னை என்தந்தை பார்த்த போதும்
விருப்பது குறைந்திடாமல் “விண்ணவன் பெருமை எல்லாம்
விரிப்பது திருக்குர்ஆனின் விளக்கமே” எனவும் சொன்னேன்
சிரிப்பதா? நெருப்புத் தானோ? செப்பிடத் தெரியவில்லை; 24
உன்னை இதற்கா வளர்த்தேன்?
பகைவனின் பேர்சொல்லத்தான் பரிவுடன் உனைக்காத் தேனா?
வகை வகையாய் இறைகள் வானிலே பெருகி வாழத்
தகுதியே இல்லா தானைத் தலைமீதில் வைக்க தானோ?
மிகுபணி உணர்வும் ஊட்டி மேனியை வளர்த்திட்டேனா? 25
தந்தையே கத்தியானார்
காய்ந்த சட்டியிலே போட்ட கடுகுபோல் பொரிந்தார் சற்றே
ஓய்ந்ததும் நெருங்கி வந்தார் ஓங்கியே தலைமேல் குட்டிப்
பாய்ந்திடும் வேங்கை போலப் பகையிலேன் கழுத்தைப் பற்றிச்
சாய்ந்தஎன் உடலைக் குத்தித் தந்தையே கத்தி யானார்; 26
‘விடமாட்டேன் உன்னை’
வெட்டுவேன் முகம்மதென்னும் வீணனின் பெயரைச் சொன்னால்;
கட்டுவேன் கைகால் எல்லாம் காட்டிலும் விடுவேன் தீயால்
சுட்டும்நான் விடுவேன்; தீமை சொல்லுவோன் அவனைச் சொன்னால்
விட்டுநான் போவேன் என்று மட்டும்எண் ணாதே” என்றார். 27
வள்ளலே உம்மை இகழ்ந்தார் ஐயா!
தந்தையின் முன்னும் பெற்ற தாய்முனும் மற்றும் என்னை
நிந்தனை செய்வார் முன்னும் நேரியோய் நுமது சீரே
சிந்தனை ஒன்றிச் சொன்னேன் சினந்தனைக் கருவி யாக்கி
வந்துஅனைவோரும் உம்மை வள்ளலே இகழ்ந்தார் ஐயா! 28
தங்கள் தகுதியை மறந்தார் ஐயா!
நன்மையை உரைப்பார் போல நாடினார் தீமை ஐயா!
புன்மையே கொள்கை யானோர் புகழினை மறந்தார் ஐயா!
வன்மையே கொள்கையானார் வாழ்வினை இகழ்ந்தார் ஐயா!
தன்மையே இன்றித் தங்கள் தகுதியை மறந்தார் ஐயா! 29
|