|
தன்னாலே ஆவியைப் போக்கும் வழிதெரியவில்லையே!
என்னாவி நீங்கும் வண்ணம் இயற்றிய இன்னல் யாவும்
மன்னாநான் பொறுத்தேன் தங்கள் மணிப்புகழ் மதிப்பைஎள்ளிச்
சொன்னாரைப் பொறுத்துக் கொள்ளும் சோதனை எனக்கு வைத்தார்
தன்னாலே ஆவி நீங்கும் தனிவரம் இல்லேன் ஐயா! 30
கனியா நெஞ்சர் என்னை வதைத்தனர்
அடித்தனர் ஒருநாள் பின்னர் அறைந்தனர் சிலநாள் காலால்
இடித்தனர் வருந்தப் பேசி எதிர்த்தனர் கைகால் தம்மை
ஒடித்தனர் பன்னாள் ஆங்கே உதைத்தனர் சொல்லால் பேசிக்
கடித்தனர் போலப் பார்த்துக் கழறினார் கனியா நெஞ்சர்; 31
ஆறுதல் கூறக்கூட அன்னை வரவில்லை
சோறுபோடாதீர் நல்ல சுவைநீரும் தராதீர் மெய்யைக்
கூறுபோட்டிடலாம் என்றும் கூறினார் சிலபேர்; பிள்ளைப்
பேறுதான் சிறந்த தென்று பேசுதல் கொடுமை என்றார்
ஆறுதல் கூறு தற்கோ அன்னையும் வரவே இல்லை. 32
ஏய்க்கும் உணர்வை வளர்த்து விட்டீரே!
“கீரையும் பருப்பும் நெய்யும் கிளறியே கொடுத்தீர்; அன்பால்
வேரையும் விதையும் நீக்கி விழைந்தநல் கிழங்கும் தந்தீர்;
சீரையே வழங்கும் நல்ல செழுங்கனிச் சாறும் தந்தீர்;
ஊரையே ஏய்ப்பதற்காம் உணர்வையும் வளர்த்து விட்டீர்; 33
உப்புத் தண்ணீரும் கொஞ்சம் சோறும் கொடுங்கள்
காலினைக் கையைக் கட்டிக் காட்டிலே விட்டு வந்தால்
போலிவன் தன்னைக் கட்டிப் போடுங்கள் அறையில்” என்றார்.
பாலினைக் குடித்த வாய்க்குப் பருகிட உப்புத் தண்ணீர்
நாலினக் கறிகள் நீக்கி நல்குக பிடிசோ” றென்றார். 34
உம்பெயரைச் சொல்லி உண்டேன்; இனித்தன
கசப்பதும் உப்பு நீரும் கண்டதே இல்லை நாவில்
இசைப்பது தங்கள் சீரே இனித்ததால் அவைகள் எல்லாம்
கசப்பினை நல்கிடாமல் கற்கண்டாய் இனிக்க யானும்
அசைவின்றி உண்டிருந்தேன் அனைவரும் வியந்து போனார்; 35
|