|
என்னை ஓநாய் போல மதித்தனர்
உறுதியில் தளரா துங்கள் ஒளியையே நினைத்த என்னை
இறுதியில் இடையர் தம்பால் எடுத்துப்போய் விடுத்து வந்தார்
மறதியாய்க் கூட என்னை மதித்திட வில்லை அன்னார்
பொருதிட வந்த ஓநாய் போலவே எனையும் பார்த்தார்; 36
ஒருநாள் பெருமழைக் காற்று
அண்ணலே உம்மை நானே அகத்திலே பொருத்தி வைத்து
வண்ணமாய் வணங்கி வந்த வகையினால் இடையர் சேரி
திண்ணமாய் அழிந்த தென்றே செப்பிடும் வகையில் ஓர்நாள்
விண்ணகம் அதிர வீசி விளைந்தது மழையும் காற்றும்; 37
விலங்குப் பூட்டு ஒடிந்தது
இடித்தது வானம் காற்றோ இரைத்தது மண்ணை வாரி
அடித்தது புயல் என்றார்கள் ஆயர்கள் தங்கள் ஆட்டைப்
பிடித்தனர் காத்தார் என்னைப் பேணிட வரவே இல்லை
ஒடித்தது சிதறிக் கைகால் ஒடுக்கிய விலங்குப் பூட்டே; 38
அம்மாறு வீட்டின்முன் வந்து விழுந்தேன்
காற்றிலே அகப்பட்டேனா? காப்பாற்றத் தான் பட்டேனா?
ஆற்றிலே நீர்வழிப்போம் அரும்புணை அதனைப் போலப்
பேற்றினைப் பெற்ற யானும் பிழையிலா அம்மா றென்னும்
ஆற்றலார் வீட்டின் முன்னே அப்போதே வந்து வீழ்ந்தேன்; 39
தங்கள் மாண்பை நேரில் கண்டேன்
ஆகையால் தங்கள் மாண்பின் அன்பினை ஈங்கே கண்டேன்
தோகையால் ஆடுகின்ற தூயநன் மயிலைப் போல
ஓகையால் என்றன் உள்ளம் ஒளிகண்டே ஆடுதையா
வாகையான் பெற்ற வெல்லாம் வள்ளலே! உம்மால்” என்றான். 40
தங்கள் நிழலை நம்பி வந்தேன்
மழலைச் சொல் கேட்டுப் பெற்றோர் மகிழ்ந்தவர் இன்றோ என்சொல்
அழலைத்தம் செவிவைத்தால்போல் அழுகின்றார் தங்கள் பாதக்
கழலைத்தம் நெஞ்சுள் வையாக் கயவர்கள் திருந்தத் தங்கள்
நிழலைத்தான் நம்பி வந்தேன் நேர்வந்த முகிலே!” என்றான். 41
|