|
இருவரையும் போற்றினார்
நிறைவான இறை வனாலே நிகழ்ந்தன எல்லாம் என்று
முறைவான நெறியார் அன்பு முகம்மது மனத்தால் எண்ணிக்
கறையிலா அம்மா றையும் கனிகபு காபு வையும்
மறைபுகல் நாவினாலே மகிழ்ந்தேத்திப் போற்றினாரே! 42
கபுகாபும், அய்யூப்பும் ஒத்தவரே
“பொறுமையின் உருவ மாக புவியில்ஓர் நபியார் ஆன
இறைமையில் ஈமான் கொண்ட இனியவர் அய்யூப் பைப்போல்
கறையிலா மனமே ஏந்திக் கபுகாபு சிறந்தார்” என்றே
இறைவனாங்(கு) உரைத்த செய்தி இயம்பினார் செபுற யீலே! 43
நம்மவரை அழைத்து வருக
பொன்னகர் மதீனா வந்து புகுந்ததும் அன்பு வள்ளல்
இன்னெழில் சைதுஅப் துல்லா இருவரை அழைத்து, “நீவிர்
நன்னல மக்கா சென்று நம்மவர் தமை அழைத்து
மன்னிடும் மதினா வுக்கு மதிப்புடன் வருக” என்றார். 44
ஆயிசா, சௌதா, பாத்திமா வந்தனர்
அன்புரை கேட்ட நல்லார் அதுமுதல் ஆங்கே இல்லை
தென்புடன் மக்கா சென்று திகழ்ரலி பாத்தி மாவை
மன்புகழ் சௌதா தம்மை மாண்புறும் ஆயிசாவை
நண்புடன் அழைத்து வந்தே நபிமுனம் பணிந்தார் தாமே! 45
மதினாவில் பள்ளி வாசல் கட்டினார்
வானகம் போற்று கின்ற வளர்மதீ னாவில் தங்கள்
ஊன்அகம் ஒன்றி மக்கள் உணர்வுடன் தொழுகை செய்யத்
தோன்றுமோர் பள்ளி வாசல் தொடங்கிட எண்ணம் கொண்டார்
போனநாள் ஒட்டகம்போய்ப் பொருந்திய இடத்தைக் கண்டார்; 46
|