பக்கம் எண் :

288துரை-மாலிறையன்

உரிய இடத்துக்கு உறுபொருள் கொடுத்தார்

இவ்விடம் பள்ளி வாசல் எழுப்பிட நலமே ஆகும்
அவ்விடம் ஏழையர்க்கே ஆண்டவன் தந்த தாலே
வவ்வுதல் போல் செய்யாமல் வளர்பொருள் அவர்கட் கீந்தும்
எவ்வகைத் தடை யிலாதும் எழுப்பினார் அருளி னாலே! 47

தொழுவதற்கு ஆடம்பரம் வேண்டாம்

“எளியவன் இறைவன் தன்னை எண்ணிநாம் தொழுவதற்கு
வளமுற இடங்கள் வேண்டாம் வானகக் கூரை போதும்
அளவிலா அன்பு காட்ட அருந்தரை வேண்டாம் ஈகை
உளஅவன் அருளே போதும்” உளத்தினில் இவற்றை எண்ணி; 48

கடவுளின் அருள் உண்டு

எளிமையாய்ப் பள்ளி வாசல் எழுப்பினார் தொழுகை செய்யும்
ஒளிர்இமாம் இடமும் இல்லை ஒன்றிட மிகுராப்பு என்னும்
வளைவதும் இல்லை தீஞ்சொல் வழங்கிட மிம்பர் இல்லை
ஒளிஇறை அவன்தன் நட்பில் ஓங்கிய அருளே உண்டாம். 49

புறஒளி இல்லை அகஒளி நிறைந்திருந்தது

புறத்தொளி விளைக்க ஆங்கே பொருத்திய விளக்கே இல்லை
அறத்தொளி விளைக்க மட்டும் ஆண்டவன் ஒளியைப் பெற்றுத்
திறத்தவர் திருக்குர் ஆனைத் திருத்தலம் ஓங்கத் தந்த
மறத்தவர் மட்டும் ஆங்கே வழங்கினார் ஒளியின் மாண்பே! 50

இதுஒரு காலத்தில் புகழுடன் விளங்கும்

“உறுதிஇல் லாத கூரை ஒழுகிடும் சுவர்கள் சாயும்
அறுதிஇட் டுரைப்போம்” என்றார் ஆங்குள அன்பர் எல்லாம்
“பொறுமையாய் இருங்கள் ஓர்நாள் புகழுடன் இது விளங்கும்
இறுதிஇல் லாமல்” என்றார் இனியநன் னபிக ளாரே! 51