பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்289


இது ஒரு காலம் புகழுடன் விளங்கும்

ஆண்டவன் படைப்பினாலே அரும்புவி வந்தீர் நீரே!
ஈண்டுமைச் சுற்றி உள்ள எளியோரை மகிழ்வித்தால் தான்
மாண்டநம் இறைவன் தானும் மகிழுவான் அருளும் செய்வான்
நீண்டவன் படைப்பை ஏற்று நெஞ்சினால் மதித்த தாலே! 52

இவ்வுலகில் தருவான் அவ்வுலகில் பெறுவான்

ஆடைஇல் லாத வர்க்கே ஆடைகள் அளித்துக் காக்கக்
கூடிய முசுலீம் மாந்தன் கூடுவான் பொன் நாட்டில்தான்
நாடிய நலங்கள் பெற்றே நல்லாடை பெறுவான்; இங்கே
வாடிய பேர்க்கு அறத்தை வலக்கையால் மறைத்துச் செய்க 53

நல்ல நெறியைக் கடைப்பிடியுங்கள்

மனத்துக்கண் மாசில் லாமை; மனிதரை அன்பாய் நோக்கல்;
இனத்துக்குள் பிறந்தோன் தன்னை இன்முகம் காட்டிப் பேசல்;
மனத்துக்கே உகந்த நல்ல மாண்பறம் செய்யத் தூண்டல்
எனைத்துக்கும் மேலாய்ப் பாதை இடறியோன் தனைக் காப்பாற்றல்; 54

இவைகளே நல்லறங்கள்

கண்ணிலார்க் குதவல் செல்லக் காலில்லார்க்(கு)ஒரு கைஈதல்
மண்ணிலே கல்லும் முள்ளும் மறித்திடில் அகற்று வித்தல்
தண்ணீர்கேட் பானின் வேட்கை தவிர்த்திடல் இவைகள் எல்லாம்
எண்ணிடில் இயற்கையாக இயற்றிடும் அறமே ஆகும்; 55

மறுமைக்கான வழியில் வாழ வேண்டும்

தகவிலர் தக்கார் என்னும் தன்மைகள் அவரவர்தம்
மிகைப்பொருள் தன்னால் ஆகும்; மின்பொருள் உலகம் வேண்டும்
தகும்பொருள் நாம் செய்கின்ற தனிஅறம் தன்னால் ஆகும்
வகைபெறும் மறுமைக்கான வழியில்நாம் வாழ வேண்டும். 56