பகைவரும் முசுலீமாய் மாறினார்
“நன்னெறி இவற்றை ஒப்ப நால்வகை நெறியும் கூற
இந்நெறி சொல்கின் றாரே இனியவர் என்று வாழ்த்திப்
பன்னெறி படர்ந்தி ருந்த பகைவகை நெறியினாரும்
முன்னெறி இதுவே” என்று முசுலீமாய் மாறி வந்தார். 57
பசியைப் போக்குக
கனிந்தவர் அபூ அய் யூபு காதலார் பெருமான் தம்மை
நனிசிறப் புடைய நெஞ்சால் நலம்பேணி வரும்நன் னாளில்
பனிமொழி நபியார் அன்புப் பார்வையால் அன்பர் தம்பால்
தனிமனம் மகிழ நல்லீர் “தகும்பசி தீர்ப்பீர்” என்றார். 58
இருவரே உண்ண உணவு உள்ளது
“நறுமண மேனி கொண்டீர்! நல்கிடும் சோறு வீட்டில்
இருவரே உண்ணும் வண்ணம் இருப்பதாய்ச் சொன்னார் அன்பர்;
“தருக நீர் அதனை” என்ற தகுநபி ஆணை கேட்டுத்
திருமனத் தொண்டர் அன்பைச் சேர்த்துடன் கொண்டு வந்தார்; 59
அனைவரும் உண்டும் குறையவில்லை
கொஞ்சமாய் இருக்கும் சோற்றைக் குறைவின்றி நீங்கள் எல்லாம்
மிஞ்சவே உண்க” என்றார். மேவியோர் உண்ட பின்பும்
எஞ்சிய உணவை மேலும் இருபதி னைந்து பேர்கள்
வஞ்சனை இன்றி உண்டும் வற்றாமல் இருக்கக் கண்டார்; 60
உண்டவர் அனைவரும் ஈமான் கொண்டனர்
அரும்பசி கொண்ட மற்றும் அறுபது பேரைக் கூவி
விரும்பியே உண்க என்றும் விளம்பினார் வந்தவர்கள்
பெரும்புகழ் இறைவன்தன்சீர்ப் பெயரினை வாழ்த்தித் தங்கள்
இரும்பசி போக்கிக் கொண்டே ஈமான் கொண்டாங்கே போனார்; 61
|