மேலும் தொண்ணூறு பேர் உண்டனர்
மேலும்போய்த் தொண்ணூ றன்பர் மேவிட அழைத்தார் ஆங்கே
தோலும் வல் எலும்பும் போலத் தோன்றிய பசிவல் லார்கள்
காலும் கையாலும் ஓடிக் கடுகியே விரைந்து வந்து
சூலும்கொண்டார்போல் தங்கள் சுடர்மேனி பொலியத் தின்றார்; 62
எல்லாரும் கலிமா ஓதினார்
தின்றனர் எலாரும் அன்புத் தீருக்குர்ஆன் கலிமா ஓதி
நின்றனர் கோமான் நெஞ்சில் நிலைத்தஅச்சோற்றில் மட்டும்
ஒன்றுமே குறைய வில்லை உவப்புடன் மீண்டும் சென்று
நன்று நன்றென்று கூறும் நல்லோரை உண அழைத்தார். 63
நூற்றெண்பதுபேர் உண்டனர்
நூறொடும் எண்பதின்மர் நோய்ப்பசி யாரைத் தேடிப்
பேறொடும் அழைத்தார் அந்தப் பேர்களும் விரும்பி வந்து
சோறொடும் அன்பைக் கூட்டிச் சோர்வற உண்டும் சோற்றின்
கூறொன்றும் கூட ஆங்கே குறைவின்றிப் பெருகக் கண்டார். 64
மதினாவின் பெருமை கண்டார்
உண்டவர் மாந்தர் வானம் உடையவர் புதுமை தன்னைக்
கண்டனர் நெஞ்சம் மாறிக் கலிமாவை ஓதித் தாங்கள்
தொண்டனார் ஆகி அன்பால் தொடர்ந்தனர் நபிக ளாரை
வண்டெனச் சூழ்ந்து வாழ்ந்தார் மதினாவின் பெருமை கண்டே. 65
மதினா-மக்கா மக்கள் சகோதரர்கள் என்றார்
அடைக்கலம் புகுந்தவர்கள் அன்புள மக்கா மக்கள்
உடைப் பெருஞ்செல்வம் யாவும் உதறியே வந்தவர்கள்
கொடைக்குண மதீனா மக்கள் கோதிலா மக்கத் தாரை
உடன்பிறந் தாராய் ஏற்றல் உயர்கடன் என்றார் அண்ணல். 66
ஒருவருக்கொருவர் உதவினார்
அரவணைத் தன்பு காட்டி அரும்பொருள் பொன்பெண் யாவும்
புரவலர் ஆகத் தந்து போற்றுதல் கடமை என்றே
கரவிலா வாழ்க்கை வாழக் கற்பிக்கும் நெறியார் சொல்ல
விரவுசீர் மதீனா மாந்தர் விரைவுடன் பணிமேற் கொண்டார்; 67
|