இரு ஊராரும் அன்பு செய்து கொண்டனர்
ஒருவருக் கொருவர் அன்பால் உயர்ந்தனர்; எளியர் என்னும்
அருவருப் பவர்களுக்குள் அரும்பவே இல்லை; விண்சீர்
வரும்வரும் என்னும் எண்ணம் வளரவே - மதினா மக்கா
இருபெருங் கடல்களாக இணங்கியே ஒன்று சேர்ந்தார்; 68
தன்னலத்தோர் இல்லை
விரிந்தது நட்பின் மாட்சி விளைந்ததே ஈகைக் காட்சி
தெரிந்ததே இரக்க மேன்மை திகழ்ந்ததோ அன்பின் தூய்மை
பரிந்துவந் துதவி செய்யும் பக்குவம் நிறைந்த தாலே
கரிந்ததன் னலத்து நெஞ்சோர் காணவே இல்லை ஆங்கே! 69
பிரிவினை இல்லை
பரிவிருந் ததுவே நெஞ்சுள் பணிவிருந்ததுவே வாய்மை
விரிவிருந்ததுவே நேர்மை விளக்கிருந்ததுவே; மக்கள்
புரிவிருந் ததிலும் வானப் புகழ் தெரிந்ததுவே; நெஞ்சுள்
பிரிவினை இல்லார் வாழ்வின் பெருமையே தெரிந்த தாங்கே. 70
எழுபது பேர் திண்ணைத் தோழர்கள்
ஆதரிப் பவர்கள் இல்லா அன்பர்கள் எழுபதின்மர்
சோதனை யாவும் வென்று தூயர்தம் உதவி யோடு
மேதகு பள்ளி வாசல் வியன்திருத் திண்ணை வாழ்ந்தார்
ஆதலால் அன்ன வர்க்கே அண்ணலார் துணைவர் ஆனார்; 71
வானிலே இடம் உண்டு
நாட்டிலே மண்ணிழந்து நலிபவர்க் கெல்லாம் வான
வீட்டிலே பெருமை மிக்க வியனிடம் உண்டு நன்மை
கூட்டிய பெருமை அல்லா கொடுப்பவன் என்றபோது
கேட்டவர் மக்கா மாந்தர் கிளர்ந்துடன் மகிழ்வு கொண்டார். 72
காய்ச்சலே இல்லாத ஊர்
ஓய்ச்சலும் ஒழிவும் இன்றி உழைத்தமக் காவின் மக்கள்
காய்ச்சலும் களைப்பும் கொண்டு கலங்கிய நிலைமைகண்டு
தாய்ச்சுடர் மனத்து நல்லார் தலைவன்முன் வேண்டி நின்றார்
காய்ச்சலோ அந்நாள் தொட்டுக் காணவே இல்லை ஆங்கே! 73
***
|