5. இறையில்லம் நோக்கித் தொழுகை
நடத்திய படலம்
உகுபான் ஆடு மேய்த்தான்
எழில்நகர் மதீனா வாழும் இடையருள் ஒருவன் சின்ன
பழிஇலா உகுபான் என்பான் பரிவுடன் ஆடு மேய்த்து
வழி இளைப் பாறி நீழல் மரத்தின்கீழ் இருக்கும் ஓர்நாள்
விழிநெருப் புடைய வேங்கை வெம்பசி மிகவந் துற்றே; 1
வேங்கை வேட்டைக்கு வந்தது
பொறுப்புடன் புல்லை மேய்ந்து பொலிந்து செல் ஆட்டு மந்தை
இருப்பதைக் கண்ட போழ்தில் இன்றுதான் வேட்டை என்னும்
விருப்புடன் நேரம் பார்த்து வெயில் நிழல் மாறி மாறி
வருவது போல வந்து வாய்ப்பெதிர் பார்த்த தாங்கே! 2
பெண்ணாட்டைத் துரத்தியது
பதுங்கியே வந்த வேங்கை பாய்ந்தது பசும்புல் பக்கம்
ஒதுங்கியே மேய்ந்த மந்தை ஒய்யெனச் சிதறும் வண்ணம்
பிதுங்கிய சூல் வயிற்றுப் பெண்ணாட்டைத் துரத்திப் பாய
வதங்கிய மேனி யோடு வாடியே வீழ்ந்த தாடு; 3
புலியை அதட்டி ஓட்டினான்
கதறியே வீழ்ந்த ஆட்டைக் கவின்புலி கவ்விப் போக
உதறியே கைகால் ஆயன் ஓடினான் மலையின்மேலே
சிதறிய மந்தை நீங்கிச் சென்றிடும் புலியை உள்ளம்
பதறியே அதட்டிச் சென்றான் பற்றிய ஆட்டை மீட்க; 4
புலி பேசியது
அஞ்சிய புலிஅவ் வாட்டை அவ்வழி விடுத்துக் குன்றில்
எஞ்சிய மற்றோர் பாதை ஏகியே உச்சி சென்று
கெஞ்சியே கேட்பதைப்போல் கீழ்நோக்கி நோக்கிப் பார்த்துக்
கொஞ்சிய குழந்தை போலக் கூறிய தாங்கிருந்தே! 5
|