பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்295


நான் பேசுவதா புதுமை?

சுவைஎலாம் விளைக்கும் நல்ல சோற்றினை உண்டி டாமல்
நவைஎலாம் வயிற்றுக் கீயும் நச்சினை உண்பார் போலத்
தவறிலா இறைவன் கொள்கை தன்னையே மறக்கின் றாரே
இவை எலாம் புதுமை அன்றி என்னுரை புதுமை யாமோ? 12

மக்கள் அறியாமையே புதுமை

அறியாமை உற்ற மாந்தர் அகம்தாமே புதுமை” என்று
சரியான நெறியைக் கூறிச் சட்டென அந்த வேங்கை
பெரிதான மலைமேல் ஓடிப் பிறர்காணா வழியில் செல்ல
வறியான்அவ் விடையன் அந்த வாய்மொழி போற்றிக் கொண்டான்; 13

உகுபான் மனம் மாறினான்

விலங்கினை மேய்த்து வாழும் வினையுளேன் என்ற போதும்
நலங்களை அளிக்க வந்த நபியாரின் நெறியைப் போற்றோம்
கலங்கிய வாழ்க்கை கண்டோம் கடமையை மறந்தோம் என்றே
இலங்கெழில் உகுபான் என்னும் இடையனும் நபிமுன் சென்றே; 14

குணம் கெட்டுத் திரிந்தேன்

புலங்கெட்டுத் திரிந்தேன் ஐயா புலியினால் வாழ்வு பெற்றேன்;
நலங்கெட்டுத் திரிந்தேன் நெஞ்சில் நன்றியும் கெட்டு வாழ்ந்தேன்;
குலம் கெட்டுப் போகக் கொள்கைக் குறிகெட்டுத் திரிந்தேன்; நல்ல
நிலம் கெட்டுப்போகா வாறு நிழல் கேட்டேன் ஐயா” என்றான். 15

உகுபான் கலிமா ஓதினான்

“கோமானே! அன்பு கொண்டேன் குறையிலாக் கலிமா ஓதி
நாமாண்பு பெற்றேன்” என்று நல்வண்ணம் சலாம் உரைத்துப்
பூமாண்ட மேனி கொண்ட புகழ் நபியாரை வாழ்த்தி
ஈமானில் சிறந்து சென்றான் எழில்கொண்ட உகுபான் தானே. 16

ஒரு முதியோன் வந்தான்

மணக்கும் வேர்வை முகம்மதுவின் மதினா வருகை ஆனதன்பின்
கணக்காய் ஓராண் டானவுடன் கழிந்த இளமை ஒருமுதியோன்
வணக்கம் இறைவன் தனக்குரைத்து வந்து நின்றான் பார்த்தவரும்
“இணக்கம் உற்று வந்துள்ள எளியோய் நீவிர் யார்? என்றார். 17