பக்கம் எண் :

296துரை-மாலிறையன்

அடியேன் பெயர் சல்மான்

மணிவாய் உரைசெய் மலர்முகத்தீர்! மாறா வளமைப் பாரீசில்
அணிசேர் குடியில் பிறந்தவன்நான் அடியேன் பெயரும் சல்மானாம்
துணிவாய் ஆங்கே வாழ்நாளில் தூயோர் பலரின் உதவியினால்
தணியாய் பெருமை பல பெற்றேன் தகுதி யாலும் உயர்வுற்றேன். 18

முகம்மது நபி வருவார்

ஆதம் நபியார் தம்மவரின் ஐம்ப தாம் சீர்த் தலைமுறையில்
ஈதல் நெறியின் இறுதிநபி எழில்மக் காவில் தோன்றிடுவார்
காதல் மனிதப் பிறப்புடையோர் கடவுள் தூதர் நெறிபோற்றிச்
சாதல் இல்லாப் பெருவாழ்வைச் சார்கென் றெனவே மாமறைகள்; 19

நால்வர் தேடிப் புறப்பட்டனர்

மறைகள் கூறும் நெறி வழியே மகம்மதென்பார் தோன்றிடுவார்
நிறைவாய்க் கண்டு மகிழ்ந்திடுவோம் நேரில் என்ற ஆர்வுடனே
கறையில் லாத சைதென்பார் கனிந்த நெஞ்சத்து உறக்கத்து
முறைதேர் உதுமா உபைதுல்லா முனைந்து நால்வர் புறப்பட்டார்; 20

ஒருவர் மறைந்தார்

தேடும் பணிசெய்து உயர்சைது திரும்பா உலகம் போய்ச் சேர்ந்தார்;
நாடும் உறக்கத் தினியவரோ நல்லீர் உம்தாள் வந்தடைந்தார்;
ஈடில்லாத உதுமானோ இனியமறைச் சான்றோரானார்;
தேடிஇன்னும் திரிகின்றார் தீரா ஆசை உபைதுல்லா; 21

உம்மைக் காணவே இருக்கின்றேன்

எண்ணில் லாத சான்றோர்கள் ஏந்தல் உம்மைத் தேடியவர்
பண்ணார் இபுனு கைபானும் பன்னாள் ஈங்கே வாழ்ந்தார்கள்
அண்ணல் உம்மைப் கண்ணுறவே அசுலா(து) ஈங்கே இருக்கின்றேன்
தண்ணார் அருளே வேண்டியிங்குத் தவியாய்த் தவித்து வாழுமெனை; 22

தண்டனை கொடுத்தார்கள்

அந்நாள் அடிமை கொண்டவர்கள் அடிமேல் அடிவைத் தடிப்பதுபோல்
இன்னல் பலவும் செய்தென்னை இரக்கம் இன்றி வதைத்தார்கள்
“முந்நூறு ஈச்ச மரம்நட்டு முழுதும் வளர்த்துக் கொடுப்பதுடன்
பொன்னா யிரத்தி ருநூற்றோடும் பொருந்(து) ஐம்பதுபொன் வராகன்கள்; 23