வரமே தருக
தரவே வேண்டும்” என்றார்கள்’ தருவ தெவ்வா றென எண்ணி
வருகை தந்தேன் உம்தாளின் வரமே வேண்டி நிற்கின்றேன்
உரவோன் சல்மான் கூறியதை ஒளியார் நெஞ்சில் எண்ணியுடன்
“கரவில் லாமல் தரஒப்பிக் கடிதில் வருக” எனச் சொன்னார்; 24
முந்நூறு ஈச்சங்கன்றுகளை எடுத்து வரச் சொன்னார்
மன்னர் சொன்ன வாறு அன்னார் மாறா உறுதி யளித்தவுடன்
இன்னல் தீர நபிநல்லார் எதிரில் வந்து நின்றாரே;
தன்னேரில்லார் தோழருடன் சல்மான் நல்லார்பின்வரவே
முன்னர் ஈச்சங்கன்றுகளை முந்நூறு எடுத்து வரச் சொன்னார். 25
கடனைத் தீர்த்து விடுங்கள்
அன்றே நல்லார் முந்நூறாம் அரிய கன்றை நட்டார்கள்
ஒன்றே ஆண்டில் கன்றெல்லாம் ஓங்கி வளர்ந்து கனிந்தனவே
நன்றே செய்வார் ஓரிரும்பை நன்கு கனிந்த பொன்னாக்கி
இன்றே செல்வீர் கடன்தீர்த்தே ஈங்கே வருவீர்” எனச்சொன்னார். 26
கையிலிருந்த பொன் குறையவில்லை
அடிமை கொண்டார் தமைநாடி
அழைத்துப் போய்ஈச் சங்கொல்லை
பிடிமின் என்றே கொடுத்ததன்பின்
பெரும்பொன் தந்து கடன்தீர்த்து
நெடிய கைப்பொன் குறையாத
நீர்மை கண்டு வியந்தவனாம்
அடியான் ஓடி முகம்மதுவின்
அடியே பற்றித் தொழுதெழுந்தான்; 27
நீரே வைத்துக் கொள்க
“ஐயா! ஐயா!! கட னெல்லாம் அளித்துத் தீர்த்தேன் இருந்தாலும்
கையில் உள்ள இப்பொன்னோ கரைய வில்லை இதோ” என்றான்
செய்ய மேனி நபிஒளியார் செம்பொன் அதனைப் பெருமையுடன்
உய்யவைத்துக் கொள்விரென உரைத்து நண்பாய் அமைந்தனரே! 28
|