நல்ல முறையில் வாழ்ந்தான் சல்மான்
சல்மான் நல்லார் பொன்பெற்றுத் தக்கோர் பாதம் பணிவுற்றுப்
பல்வான் புகழும் நிலைபெற்றுப் பாரில் எளியார் தமைப்போற்றி
வெல்வான் கொண்ட வாழ்க்கையினால் விளங்கும் இறைவன் தாள் வாழ்த்தி
நல்வான் பெருமை உற்றானே நலியா வாழ்வு பெற்றோனே; 29
முகம்மது அன்பரிடம் பேசினார்
கடவுளை வணங்கு தற்குக் காலமும் இடமும் இன்றிக்
கடமையை மறந்து மக்கள் கருத்திலே ஒருமை யின்றி
உடமைகள் சேர்ப்பதற்கே உழைக்கிறார் நாளும் என்றே
அடர்கொள்கை நபியார் கூறி அன்பரை அழைத்துச் சொன்னார்; 30
தொழுகையை அறிவிப்பது எவ்வாறு?
பலரும்பல் வகையாய்க் கூறிப் பரம்பொருள் தொழலாம் என்றார்
சிலரோநற் கொடியை நாட்டிச் செப்பலாம் என்றார். சங்கு
நலமாக ஊதிக்கூட நவிலலாம் என்றார் ஆங்கே
அலரத்து உமர் நல்லாரோ அருநெறி ஒன்றைத் தந்தார். 31
அலரத்து உமர் கூறிய முறையை ஏற்றனர்
மனமகிழ் வுற்ற மக்கள் மனைதொறும் நீங்கி வந்தே
இனத்தொடும் கூடி வானத்து இறைவனைத் தொழும் முறையைக்
கனவினில் கண்டேன் என்று கழறிட அதனைக் கேட்ட
அனைவரும் நலமே என்றார் அம்முறை தனைமேற் கொண்டார். 32
தொழுகைக்கு அழைத்தனர்
“அல்லாவே பெரி யோன்” என்றே அரியநான் முறைகள் சொன்னார்
அல்லாவைத் தவிர வேறு இங்(கு) ஆருமே வணக்கம் செய்ய
இல்லவே இல்லை யானே இயம்புவேன் சான்றும்” என்றே
சொல்லினார் இருமுறைகள் தொழுகையின் தொடக்கத்துக்கே! 33
புகழோனைத் தொழ வாருங்கள்
“முகம்மது சல்லா லாகூ அலைகி வசல்லம் அல்லா
தகுதூதர் ஆனார் என்றும் தருகிறேன் சான்றும்” என்றே
புகலுதல் இருமுறைகள் புகன்றபின் தொழவா ருங்கள்
புகழோனை” என இரண்டு முறைகூறி அழைத்தார் ஆங்கே; 34
|