வணக்கத்துக்குரியவன் அல்லாவே
“ஈடேற்றம் பெறவா ருங்கள்” எனஇரு முறை சொன்னார்கள்
பீடுள்ள அல்லாவே மீப் பெரியவன் என்றுஇரண்டு
கேடிலா முறையில் கூறி, “வணக்கத்துக் குரியோன் அல்லா
ஈடிலான் அன்றி வேறு எவருமே இல்லை” என்றார்; 35
கடவுளைத் தொழச் சென்றார்கள்
காலையில் அழைக்கும் போது கண்மூடும் உறக்கத் துக்கும்
மேலான(து) இறையவன்முன் வேண்டியே தொழுதல்” என்றார்
வேலையில் மூழ்கி யுள்ள வியன்முசு லீம்கள் எல்லாம்
காலமே கனிந்த தென்று கடவுளைத் தொழச் சென்றாரே! 36
இனிய முசுலீம் ஆனார்
ஒளியவன் முன்னே எல்லாம் உடன்பிறந் தார்கள் ஆகப்
பொலிவுறத் தூய்மை ஆக்கிப் புகழ்மிகும் உலு வென்கின்ற
தெளிவினை அடைந்து வந்து தேவனின் அருளை வேண்டி
எளியராய் வாழுவோரே இனியமுசு லீம்கள் ஆனார். 37
‘பிலால்’ என்பவர் பாங்கு கூறினார்
பாங்குடன் பாங்கு கூறும் பணிசெயும் பிலால் என்பாரைத்
தீங்கிலார் என்று தேர்ந்து தெளிவுடன் அழைக்க வைத்தார்
ஆங்கவர் கறுப்பினத்தில் ஆனஓர் அடிமை யாக
ஏங்கியோர் எனினும் அண்ணல் இதயத்தில் நிலைத்து நின்றார். 38
உலகில் எந்நேரமும் ஒலிக்கும் அல்லாவின்புகழ்
அந்தநாள் அண்ணல் இட்ட ஆணையின் படியே சொல்லி
வந்ததாம் “பாங்கு” வைய மக்களின் செவியில் ஓங்கிச்
சிந்தனை வளர்த்தும் அல்லாச் சீரினை எடுத்துரைத்தும்
இந்தநற் போதும் கூட எங்கணும் ஒலிப்ப தாமே! 39
|