தீயவர் ஓநாயைத் திட்டினர்
ஓநா யே! உன் இனப்பண்போ உயிரைக் கொன்று தின்பதுவே;
ஆனால் நீயோ அறம்மீற ஆகா தென்றே நிற்கின்றாய்
“போனால் பிழையே இல்லை”எனப் பொல்லார்கூற நல்லோநாய்
தீநாக் குடையோர் திகைப்புறவே திட்டி விட்டு மறைந்து விட; 45
முகம்மதுவே இந்த ஓநாய் மனத்தை மாற்றி விட்டான்
நாணார் அவர்கள் “ஓநாயை நாட்டில் கெடுத்தோன் முகம்மதுவே;
போனான் மக்கா விட்டுஅவன்தான் புகுந்தான் மதினா என்றாலும்
வாணாள் எல்லாம் வஞ்சகமே வாய்த்த நெஞ்சம் கொண்டவனைக்
காண வில்லை இங்கெனவே கருதா திருத்தல் தீதாகும். 46
அழித்துவிட வேண்டும் என்றார்கள்
வளர விட்டால் தீமைகளை வளர்த்து விடுவான் அவன்வாய்ச்சொல்
மலர விட்டால் நமைஎல்லாம் மாய்த்து விடுவான் அவன்கருத்தை
உளற விட்டால் ஊரைஎலாம் ஒழித்து விடுவான் அதனாலே
அலற அழிப்போம்” என்றவர்கள் அறைந்து மக்கா உட்சென்றார். 47
ஓநாயின் உயர்பண்பு உரைத்தார்
அரம்போல் கூர்மை அறிவிருந்தும் அரிய மனிதப் பண்பின்றேல்
மரம்போல் பவனே மனிதனெனும் மாறா வாய்மைக் கருத்ததனை
வரம்பு மீற விரும்பாத வாய்மை ஓநாய் வழியாகப்
தரும்பண் புடையார் முகம்மதெனும் தன்மை ஈங்கே உணர்ந்தோமே! 48
நெறிகேடர் போர் மேல் சென்றார்
நேர்மை இல்லா நெறிகேடர் நெருங்கிப் பேசிப் பகை வளர்த்துப்
போர்மேல் செல்லும் ஆர்வுடனே போன செய்தி தனைமக்கா
ஊர்முன் சென்ற ஒற்றர்கள் ஒற்றுக் கேட்டு முகம்மதுவின்
சீர்முன் வந்து சொன்னார்கள் சிறியோர் இயல்பை எண்ணியவர்; 49
|