இனி நன்மை நடக்கும்
தொடர்ந்த கொள்கை யவர்களையும் தோழர் களையும் வரச் செய்தே
அடர்ந்த ஒளியின் சுடர்க்கோமான் ஆர்த்த தீயோர் நிலையினையும்
படர்ந்த அன்னார் பகையினையும் பன்னிப் பன்னி ஆராய்ந்து
நடந்த வெல்லாம் நடந்தனவே நடக்கும் நன்மை எனச்சொன்னார். 50
பீசபில் போர் தொடங்குவோம்
இறைவன்நெறியில் நாம்செல்வோம் இழிந்தோர் எதிர்க்கும் வினைவெல்வோம்
நிறைவான் பெருமை அது பேசி நெருங்கும் பீச பில்போரை
முறையில் தொடங்கிக் குபிர்குழுவை முழுதும் சாய்ப்போம் எனக்கூறிக்
குறைவில் லாமல் சேர்த்திடுங்கள் கூர்மைப் படைகள் என்றாரே! 51
பல்வகைப் படைக் கருவிகள் ஏந்தினர்
ஈட்டி கத்தி வேல்வாள்கள் எறியும் சின்ன கைக்கத்தி
மாட்டி இழுக்கும் அரிவாள்கள் மறிக்க உதவும் கேடயங்கள்
பூட்டி எறியும் வில்லம்பு பொல்லாச் சூலம் கவண் எறிகல்
கூட்டி வைத்த வீரர்களின் கூட்டம் தன்னை நோக்கியவர்; 52
தோழர்கள் புறப்பட்டார்
வலிமை கொண்ட அபூபக்கர் வாய்மை தவறா உமறுகத்தா(பு)
அலியார் இபுனு அபூத்தாலிப்பு அரியார் உதுமான் அருந்தோழர்
புலியார் அன்ன போர்மறவர் போற்றும்மதீனா வீரர்கள்
ஒலிஆர்த் தெழுந்து புறப்பட்டார் ஒட்டார் கெட்டார் எனஆங்கே 53
பகைவர் தூதனை அனுப்பினார்
மலையை உடைக்க வருவதுவோ மத்தாய்க் கடலைக் கலக்கிடவோ
நிலவைப் பிடித்து நசுக்கிடவோ நெருங்கி வரும்இப் படைஎனவே
குலைகள் நடுங்கக் கொடும்பகைவர் கூடி ஆய்ந்து முடிவாகத்
தலைமைத் தனத்தான் ஒருத்தனையே தகுந்த தூதாய் அனுப்பி வைத்தார்; 54
தூதன் உரையை மதித்தார்
தூதன் வந்து தோன்றல்முன் “தூயோய் மகுசி முதலானோர்
ஏதம் நீங்க உம்தாளை ஏற்றுப் பணிவார் ஆதலினால்
போதும் சினமே ஆறுங்கள் புகழோய்” என்றான் அதுகேட்டுப்
பாதம் மண்மேல் தோயாதார் படையை மீண்டு வரச் சொன்னார். 55
|