பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்303


மக்காவைச் சூழ்ந்த சிற்றூர்களைக் கொள்ளை இடுங்கள்

மீண்டு போகும் இடைவழியில் மிக்க வீரர் தம்மவருள்
மாண்ட சீர்கொள் எண்பதுபேர் மாறாக் கொள்கை யவர்தம்மை
ஈண்டு நீவிர் விரைந்தேகி இனிய மக்கா நகர் சூழ்ந்த
நீண்ட சிற்றூர் தமைஎல்லாம் நெருங்கிக் கொள்ளை இடு’கென்றார். 56

வீரர்கள் பறந்தனர்

எட்டுப் பத்துப் பேர் படைக்கே ஏற்ற தலைமை உபைதாவும்
கட்டுப்பட்டு முகம்மதுவின் கனிந்த ஆணை கேட்டவுடன்
கட்டுப்பாட்டுக் கொட்டி வராக் கரியோர் தம்மை வெட்டி வரத்
தட்டிக் குதிரை மேலேறித் தாவிப் பறந்தார் படையோடே 57

இக்கிரிமா தாக்கினான்

தாக்க வந்த படைவலிமை தன்னை அறிந்த அபூசகுலின்
நீக்க மில்லா ஒரு புதல்வன் நேர்மை இல்லா இக்கிரிமா
“ஊக்கம் உள்ள உபைதாவை ஒடுக்கி விடுவேன்” எனக்கூறித்
தீக்கண் சொரிய எதிர்வந்து திட்டிப் பகைத்துப் போர் செய்தான். 58

பகை இடத்திலும் அன்பர் இருந்தனர்

அங்கும் இங்கும் ஆள்தேடி அலைந்து திரிந்தாள் வெற்றிப்பெண்
அங்கே பகைவர் படைக்குள்ளே அன்பர் சிலரும் இருந்தார்கள்;
தங்க மனத்து மிகுதாவும் தனிச்சீர் உடைய உதுபத்தும்
இங்கே உபைதா நல்லடியே இனிதாம் என்றே வந்திணைந்தார்; 59

இக்கிரிமா ஓடி ஒளிந்தான்

வலிமை தன்னை நீங்கியதாய் வருந்தித் தீயன் இக்கிரிமா
எலியின் கூட்டம் போல்உள்ள எளிய அவன்தன் படைதன்னைப்
புலியே அன்ன உபைதாமுன் பொருதச் செய்தல் தகாதென்றே
ஒலிக்கால் கழலும் ஒடிந்தகல ஓடிப் போனான் ஒளிந்திடவே! 60

கோழையைத் துரத்தாதே!

கோழை முதுகில் குத்துவதும் கோழைத்தனமே என உபைதா
ஆழ நினைத்தே ஓடுகிற ஆற்றல் இலான் இக்கிரிமாவை
வீழச் செய்யும் வினைநீக்கி வெற்றி வெள்ளைக் கொடிஏந்தி
ஆழி போல அருள்கொண்ட அல்லா தூதர் முன்வந்தார்; 61

***