6. பாத்திமா திருமணப் படலம்
தொடர்ந்து தீமை வளர்த்தனர்
நாளும் நாளும் புதுமைகள் நடந்த வண்ணம் மதீனாவில்
நீளும் இசுலாம் நெறிக்கொள்கை நிலைத்து வளர்ந்து வரும் நாளில்
தேளும் பாம்பும் போல் பகைவர் தேடிச்செய்யும் தீமைகளைத்
தோளும் குன்றும் ஒன்றாகத் தோன்றும் வீரர் எதிர்த்தழித்தார்; 1
கதீசாவின் பெண்களுள் பாத்திமா சிறப்பு
பெண்கள் குலத்தின் மணிவிளக்காம் பெருமை கொண்ட கதீசாவின்
கண்கள் நான்கே எனச்சொல்லும் கணக்கில் பிறந்த பெண்மக்கள்
விண்கண் பொலியும் திங்கள்போல் விளங்கும் முகத்தார்; அவர்க்குள்ளே
தண்பொன் மேனி பாத்திமாவும் தனிச்சீர் பெற்றுத் திகழ்ந்தார்கள். 2
சிறப்பாய்க் கடவுள் படைத்திருந்தான்
படைத்த கடவுள் திறமைஎலாம் பாத்தி மாவின் அழகுதனில்
அடைத்து வைத்த சிறப்போடும் ஆக்கி வைத்தான் எனும்வகையில்
இடைச்சிறுத்த கொடி நடையும் இனித்த மொழியும் எழில்மனமும்
முடித்த பவளமேனியுடன் முனைந்து முடித்து வைத்தனனே! 3
பாத்திமா சிறந்து விளங்கினார்
பேதைப் பருவப் பாத்திமாநற் பெதும்பைப் பருவம் நிறைவுற்று
மாதர் கண்டும் காமுறவே மங்கைப் பருவம் அடைந்தார்கள்
ஈதல் மேன்மை இறையவனின் ஈடில் லாத பேரருளால்
தீதில் லாத நன்னெறிகள் தேடும் இதயம் பெற்றார்கள்; 4
காளையர்கள் ஆர்வம் உள்ளனர்
பூத்துப் பொலியும் புதுமலரின் புகழை உணர்ந்த காளையர்கள்
காத்துக் கிடந்து தவஞ்செய்து காலம் எல்லாம் கிடந்தாலும்
ஆர்த்துக் குலுங்கும் இச்சோலை அழகில் திளைக்க இயலாதோ?
பார்த்தே ஏங்கத் தான்நம்மைப் படைத்தான் தானோ இறை? என்றார். 5
|