அல்லா படைத்த பெருமை
எல்லா மலரும் எழிலாக இருக்கும் எனினும் இவர்உலகில்
இல்லா மலர்போல் இருக்கின்றார் எழிலும் தூய இயல்பதுவும்
சொல்லால் சொல்ல இயலாத சுடர்மெய் கொண்ட இவர்தம்மை
அல்லா படைத்த பெருமையினால் அன்பின் உருவாய்ப் பொலிகின்றார். 6
ஒவ்வொருவரும் புகழ்ந்தனர்
கண்ட ஒவ்வோர் காளையரும் கருத்தால் இதுபோல் உரைத்தார்கள்
தண்டார் தோளார் முகம்மதுவின் தனிச்சீர் மிக்க திருவடிமுன்
வண்டார்த்திடுதல் போல் வந்து வணங்கிமொய்த்துப் “பெருமானே!
கண்டோம் தங்கள் கனி மகளாம் காணற்கு அரிய ஒளிநிலவை; 7
எம் செல்வங்களைத் தருவோம்
வாட்டி வதைக்கும் எழில் கொடியை வாழ்க்கைத் துணையாய் அடைவதற்கே
நாட்டில் உள்ள மணிவகைகள் நாலு வகையும் குவித்தீவோம்
ஏட்டில் எழுதிச் சொத்தை எல்லாம் இன்றே அளிப்போம் எனக் கூறக்
கேட்ட பெருமான் அமைதியுடன் கேட்டார் கேட்க உரைசெய்தார்; 8
அல்லா விருப்பப்படியே நடக்கும்
“எல்லாம் வல்ல அல்லாவின் எண்ணப் படியே இவ்வுலகம்
நல்லார் மகிழ இயங்குவதை நாமும் நாளும் காண்கின்றோம்
வல்லார் கேட்டு வந்துள்ளீர் வாய்மை மகளார் திருமணமோ
அல்லா விருப்பம் எப்படியோ அதுபோல் நடக்கும்” எனச்சொன்னார். 9
காளையர்கள் அமைதியானார்
பாத்தி மாவின் எழில் என்னும் பனிசூழ் சோலை விழுந்தவர்கள்
ஏத்திப் புகழும் அல்லாவின் இதயத் தொண்டர் கருத்துணர்ந்து
பூத்திருந்தும் தொட இயலாப் பொறிவண் டுகள்போல் தடுமாறி
வாய்க்குச் சோறு கிடைக்காத வறியார் போலச் சென்றார்கள். 10
அலீயார் உள்ளத்தால் விரும்பினார்
அரியார் போற்றும் புலியேறாய் அமைந்த அபூத்தாலிப்பு அலீயார்
விரியும் ஒளிசூழ் இறையருளின் விழைவால் நாளும் நெஞ்சமதில்
எரியும் காதல் தீமிகவே இணைஇல்லாத பாத்திமாவை
உரிய முறையில் அகம்வைத்தே உவகை கொண்டு திகழ்நாளில்; 11
|