மேலும் மேலும் துன்பத்தில் மூழ்கினார்
உடலும் இளைத்தார்; சில போதில் உயிரும் இளைத்தல் போலுணர்ந்தார்
கடலும் வானும் போல் பரந்த காமம் கடக்க முடியாமல்
குடலும் சுருங்கும் வண்ணத்தில் கொஞ்சம் உணவும் உண்ணாமல்
அடரும் துன்ப அலைபட்டே அலையும் துரும்பே போல் ஆனார்; 12
பாத்திமாவை மணக்க அருள்க
நாளும் நாளும் இறையவனை நாடி நின்றே அலீநல்லார்
“வாளும் மீனும் போல் கண்கள் வாய்த்த பாத்திமா தம்மை
ஆளும் வண்ணம் திருமணமே அமைத்துத் தருக” எனவேண்டி
நீளும் விருப்ப வேண்டுதலை நெகிழ்ந்து வணங்கிக் கேட்டார்கள்; 13
இறைவன் வானோரை அனுப்பினான்
கேளா ருக்கும் தரும் தூயோன் கேட்டார் தமக்கு மறுப்பானோ?
தோளார் மாலை அலீயாரின் தூய வேண்டல் தனையேற்று
வாளா இருக்க மனமின்றி வானோர் தலைவர் செபுறயீலை
ஆளாய் அனுப்பி நபியார்க்கே அரிய செய்தி தெரிவித்தான்; 14
இறைவன் அறிவிக்கச் சொன்னான்
வானை விட்டுச் செபுறயீல் வந்து நின்று நபியார்முன்
தேனைச் செவியில் பாய்ச்சுதல்போல் தெரிவித்தார்கள் அச்செய்தி;
மானைப் பெற்ற முகம்மதுவே! மாண்பு மிக்க இறைஅல்லா!
தீனை வளர்க்கும் நெறியாலே தெளிவாய் இதனைத் தெரிவித்தான். 15
விண்ணில் பாத்திமா-அலீயார் திருமணம்
விண்ணில் தூபா மரத்தடியில் மிக்காயீலும் இசுறாபீல்
தண்ணிய லாரும் சூழ்ந்திருக்கத் தக்க அலீயார் பாத்திமாவின்
வண்ண மான திருமணத்தை வகையாய் முடிக்க இருப்பதனை
அண்ணல் நும்பால் அறிவிக்க அடியேன் வந்தேன்” எனச்சொன்னார். 16
அலீயார் மகிழ்ந்தார்
சொன்ன வானோர் சென்றவுடன் சொல்ல ஒண்ணா மகிழ்வெய்தி
மன்னர் நபியார் முகம்மதுதம் மனத்தைக் கவர்ந்த அலீயாரை
முன்னம் அழைத்து விண்செய்தி முழுதும் எடுத்துச் சொன்னார்கள்.
அன்னார் செய்தி கேட்டவரும் அகத்தால் துள்ளி மகிழ்ந்திடவே; 17
|