பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்307


பாத்திமாவுக்கும் தெரிவித்தனர்

ஒளியோன் ஆணை அதன்படியே உரிய முதியோர் தமைஏவித்
தெளிவாய் வானக் கருத்ததனைத் தெரிவியுங்கள் மகட்கென்றார்
அளியோர் அவரும் அவ்வாறே அரிய மங்கை முன்சென்றே
துளியும் தவறு நேராத சொல்லால் சொல்ல முற்பட்டார்; 18

ஐந்நூறு வெள்ளி மகர் தர வேண்டும்

“அம்மா! அலீயார் நல்லார்க்கே அல்லா உம்மைத் தேர்ந்தெடுத்தான்
எம்மா தர்க்கும் கிடைக்காத இறைவன் ஆணை கிடைத்துளது;
சும்மா இல்லை ஐந்நூறு சுடர்ப்பொன் வெள்ளி மகராக
இம்மா மாந்தர் தரவேண்டும் இறைவன் ஆணை” எனச் சொன்னார். 19

இந்த மகரை ஏற்க முடியாது

முதியோர் உரையைக் கேட்டவுடன் முழுதும் மகிழ்ந்த பாத்திமாவும்
இதனை எல்லாம் ஏற்கின்றேன் எனினும் மகராய் இறைசொன்ன
அதனை மட்டும் ஏற்றிட என் அகமே மறுக்கும்” எனக் கூற
முதியோர் இந்த முன்னத்தை முகம்மதுவுக்குப் போய்ச் சொன்னார்; 20

என்ன மகர்? தெரிவியுங்கள்

தங்கள் மகளார் கருத்ததனால்தவித்த நபிமுன் செபுறயீல்
“உங்கள் மகளின் உளக்கருத்தை உணர்ந்து சொல்க” எனச் சொன்னார்
தங்கா முதியோர் உடன்சென்று தகுபாத் திமாவே! “மகர்” யாது?
எங்கட் குரைப்பீர்” எனக் கேட்டார் இறைவன் ஆணைப்படி நின்றே! 21

இசுலாம் மகளிரை மன்னிக்க வேண்டும்

உலகின் முடிவுக் காலத்தில் உளவாம் நடுத்தீர்வை நாளில்
அலகில்லாத புகழிசுலாம் அதனை ஏற்ற மகளிர்கள்
பலரும் செய்த பாவத்தைப் பரிந்து மன்னித்தல் வேண்டும்
நலமே பெற்ற குலத்தார்க்கு நல்க வேண்டும் வான்வீடே; 22

இறைவன் ஏற்றுக் கொண்டான்

இதுவே என்றன் மகராக இயம்பு கின்றேன் இசைவானேல்
மதுவே போல இம்மணத்தை மறுக்கா தேற்பேன்” எனச்சொன்னார்
முதியோர் வழியே முகம்மதுவும் முறையே கேட்ட செபுறயீலும்
அதையே இறைமுன் கூறிடவும் அனைத்தும் ஏற்றான் இறைஆங்கே! 23