இறைவன் எழுதிக் கொடுத்தான்
பச்சைத் தாளில் பொன்னெழுத்தே படியும் படியாய் அதைஎழுதி
மெச்சும் புகழார் பாத்திமாவின் மென்கை தன்னில் சேர்ப்பித்தான்
கச்சைக் கத்தி அலீயார்க்கும் கன்னி பாத்தி மாவுக்கும்
உச்சி வானில் திருமணத்தை ஒளிவா னோர்கள் நடத்தினரே! 24
மலரும் மணமும் போல் ஆனார்
வானில் நடந்த திருமணம் போல் வையம் தன்மேல் தான்நடத்த
ஆனை போன்ற அலீயாரும் அழகுக்கு இணையே இல்லாத
மானைப் போன்ற பாத்திமாவும் மலரும் மணமும் போல் ஒன்றித்
தீனை வளர்க்கும் நெறிதன்னில் திகழ வைத்தார் முகம்மதுவே! 25
அலீயார் தம் கருத்தைத் தெரிவித்தார்
அண்ணல் கோமான் முகம்மதுவை அலீயார் சென்று நேர்கண்டு
“மன்ன! தங்கள் மகளாரை மணமே புரிய விரும்புகிறேன்
எண்ணம் யாதோ?” எனக் கேட்டார் இனியார் உடனே மகளார்தம்
எண்ணம் அறிய இக்கருத்தை எடுத்து மொழிந்தார் மகளார்க்கே! 26
அமைதி மொழியால் இணக்கம் தெரிவித்தார்
மணக்க விருப்பம் இலை என்றால் மனமே திறந்து சொலவேண்டும்
இணக்கம் என்றால் சொல்லிடலாம் எனினும் அமைதி சம்மதமே!
வணக்க மான பாத்திமா வாய்த்த அமைதி மொழியாலே
இணக்கம் தன்னைத் தெரிவித்தார் இதயம் குளிர்ந்து மகிழ்ந்தாரே! 27
என்ன மகர் கொண்டு வந்தீர்?
மணமே புரியக் கொணர்ந்துள்ள மகர்யா தென்றார் நபிநல்லார்;
பணமே இல்லை என்றாலும் பாய்மா ஒன்றும் இரும்பங்கி
தனையும் ஆட்டுத் தோலொன்றும் தகும்போர்வையும் கொண்டுள்ளேன்
எனவே அலியார் சொன்னவுடன் இதயம் கனிந்தார் நாயகமே! 29
மகராக இரும்பு அங்கியே போதும்
“இரும்புஅங் கியையே மகராக ஏற்றுக்கொள்வோம்” எனச்சொன்னார்
விரும்பும் உதுமான் அங்கிதனை விழைந்து ஐந்நூறு காசீந்து
பொருந்தா விலைக்கே கொண்டார்கள் புகழோர் அந்தப்பணம்கொண்டு
விருந்தும் வைத்தார் பெரும்பொருளால் வியக்க மணமும் புரிவித்தார்; 30
|