பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்309


அனைவரும் திருமணத்துக்கு வந்தனர்

எளியோர் வாழ வழி புகலும் இனிய நெறியார் முகம்மதுவின்
எளிய மகளார் திருமணமும் எளிய நிலையில் நடந்தேற
ஒளியான் இறைவன் வழிசெய்தான் உடையார் இல்லார் முதலாக
வெளியார் உள்ளார் எல்லாரும் விண்ணோர் முன்னர்ச் சமமானார். 31

திருமணம் நடந்தேறியது

வானம் விண்மீன் மலர்தூவ வையத் திங்கள் ஒளிகாட்ட
மானை நிகர்த்த விழிப்பெண்டிர் மகிழ்ந்து கூடிப் பாராட்ட
ஏனை முதியோர் எல்லாரும் இறைவன் புகழை நிலைநாட்டத்
தேனார் அலீயார் பாத்திமாவின் திருமணந்தான் பொலிந்ததுவே! 32

வறியவன் ஒருவன் எதிர்வந்தான்

விருந்தும் சடங்கும் முடிந்தவுடன் வேற்கண் நங்கை பாத்திமாதம்
பொருந்தும் அழகு மண அறையில் போய்நிற் கின்ற வேளையிலே
வருந்தும் மொழியும் வறும்பசியும் வாட்டும் குளிரும் தொழுநோய்க்கு
மருந்தும் அறியா ஒருவறியோன் மனைக்கண் வெளியே வந்திருந்தான்; 33

அம்மா! அருள் செய்க

“இம்மா மனையில் திருமணமே இனிதாய் நடந்த தென அறிந்தேன்
வெம்மெய் ஆடை இல்லாமல் விரைக்கக் குளிரால் நடுங்குகிறேன்
செம்மை யாக வருத்துநோய் செய்பசியாலே வாடுகிறேன்
அம்மா! அருள்க” எனக்கூவி அச்சேய் வெளியே நின்றிருந்தான்; 34

வறியோனுக்குப் பாத்திமா உதவினார்

அன்னை அன்புப் பாத்திமாஅவ் அளியோன் நிலைக்குமிக இரங்கி
முன்னே அவனும் வருந்தாத முறையில் நல்லசுவை உணவைத்
தின்ன வைத்துத் தென்பூட்டித் தேற்றிக் குளிரால் வாடுகிற
அன்னான் மெய்க்குப் போர்த்துகிற அருமேலாடை தனைத்தந்தார்; 35