வறியவன் வாழ்த்திச் சென்றான்
வருத்தும் பசிநோய் நீங்கியவன் வாட்டும் குளிரின் தீங்கின்றிப்
பெருத்த மகிழ்ச்சி கொண்டிறையைப் பெருக வாழ்த்திச் சென்றவுடன்
ஒருத்தன் புகழே பேசுகிற ஒளிசேர் முகம்மது அன்பருடன்
விருப்பத்தோடும் விண் நினைவின் வேட்கை கொண்டும் வந்தனரே! 35
அம்மா! புத்தாடை எங்கே?
புதிய மணப்பெண் மேனியினில் பொலியாப் பழைய மேலாடை
அதனைக் கண்ட நாயகனார் அம்மா! என்னே புதுமையிது!
முதலில் அணிந்த புத்தாடை முன்னே அணிவாய் எனச்சொல்ல
மதிநேர் முகத்தார் தந்தையிடம் “வறியார்க் கீந்தேன் அதை” என்றார்; 36
பழைய ஆடை அல்லவோ கொடுக்க வேண்டும்!
எல்லாம் அறிந்தும் அறியார்போல் இயம்பும் அல்லாநெறி அன்பர்
“பொல்லா வறியர் வந்தாலும் புதிய ஆடை தரலாமோ?
இல்லாதார்க்குப் பழமையினை ஈந்து புதுமை அணிதல்தான்
பல்லார் ஒக்கும் கருத்”தென்றே பகர்ந்தார் அன்பு மகளார்க்கே! 37
சிறப்பானதையே தரவேண்டும் என்பதே இறையாணை
தந்தை மொழியைக் கேட்டமகள் “தகுமா நபியே! அழகாய்நம்
சிந்தை கவரும் சிறப்பினதைச் சிறப்பாய் இறைவன் தனக்காக
முந்தி அளிக்க வேண்டுமெனும் மொழியே வாய்மை மறையன்றோ?
அந்த நெறியைப் போற்றித்தான் அளித்தேன் அதனை” எனச் சொன்னார். 38
இல்லறம் பேணிக் காத்தார்
அன்பர் எல்லாம் ஆர்த்தனராய் அரிய இறைவன் புகழ்வாழ்த்தி
இன்பம் அடைந்து முறைப்படியே இருந்த வெல்லாம் தாமேந்திப்
பண்பார் அலீயார் இல்லத்துள் பணிவாய் ஏறிப் போனார்கள்
அன்பும் அறனும் உடையவராய் ஆங்கே வாழ்ந்தார் அன்பினரே! 39
|