பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்311


ஒற்றர்களே! என்ன செய்தி கூறுங்கள்?

தோழர் எல்லாம் உடன்சூழத் தோன்றல் பெருமான் வீற்றிருக்க
வாழும் பகைவர் காபிர்கள் வளர்க்கும் பகையை உடன்அறிந்து
தாழ்ந்து சொல்ல வந்தார்கள் தகுதிமிகுந்த ஒற்றர்கள்
ஏழைக்கிரங்கும் இனிய நபி! “என்னசெய்தி?” எனக் கேட்டார்; 40

அபூசகுல் படைதிரட்டி வந்துள்ளான்

“ஐய! சீபுல் பகுறென்னும் அழகுச் சிற்றூர் தனில் இன்று
வெய்ய மனத்தான் அபூசகுல்தன் வீரர் குதிரை முந்நூறில்
பையப் போரைச் செய்யத்தான் பகைமேற் கொண்டு வந்துள்ளான்
உய்ய உரைத்தோம் எனக்கூறி ஒற்றர் நீங்கிச் சென்றவுடன்; 41

தந்தையே! உடன் போருக்குப் புறப்படுக

வெற்றி ஒன்றே காணுகிற வீரர் அமுசா என்னும்தம்
சிற்றப் பாவை உடன்அழைத்துச் “சிறிய தந்தாய்! இப்போதே
குற்ற மனத்தான் அபூசகுலின் கொடிய மனத்தைப் பொடியாக்க
உற்ற முப்ப(த்)தருங் குதிரை உறுவீரருடன் செல்லுங்கள்;” 42

அபூசகுல் கொக்கரித்தான்

என்ற மன்னர் பணிஏற்ற இனியர் அமுசா புயலினையும்
வென்று வருதல் போலெழுந்து விரைந்தார் சீபுல் பகுறாரே!
அன்றங் கிருந்த அபூசகுலும் அதனை அறிந்து, போர் செய்து
கொன்றே ஒழிப்பேன்” எனக் கூறிக் கோழி போலக் கொக்கரித்தான்; 43

மசுதி என்பவன் தூது வந்தான்

அங்கும் இங்கும் நரிபோல அலைந்து வஞ்சம் புரிமனத்தான்
வெங்கண் மசுதி என்பானும் வீரன் போலப் பகைவரிடம்
தங்கி இருந்தான் இப்போரைத் தட்டிக் கழிக்க முற்பட்டே
எங்கும் நுழையும் இயல்பதனால் இனிய படையோர் முன்வந்தான். 44