போர் செய்வது நன்றில்லை
“போரா? சீச்சீ அது வேண்டாம் புகழா தோன்றும் அதனாலே?
நேராய் நின்று போர்செய்தால் நெருங்கும் அழிவே; எங்கும்செந்
நீராய் ஓடும் அபூசகுலும் நில்லான் உங்கள் வீரம்முன்
கூராய்ப் படைகள் கொண்டுள்ளீர் கொள்கை மாற்றிச் செல்” கென்றான். 45
சின்னவரை நீங்களா எதிர்ப்பது?
வீறார்ப் போடு போர் செய்ய விழைந்த அபூச குல்இடம்போய்க்
“கூறாய் ஆக்கிக் கொன்றிடுவீர்! கொள்கை சிறந்த கோமானே!
ஆறாய்க் குருதி ஓடிடவும் அழித்து மீள்வீர்; இருந்தாலும்
பேறா இந்தச் சின்னவரைப் பெரிதாய் எண்ணி எதிர்ப்பதுவே? 46
அமுசாவை அனுப்பி வைத்தான்
நிறைஇல்லாரை எதிர்ப்பதனால் நிலைக்கும் பழிதான்” எனக்கூறி
முறைஇல் லாத மசுதியவன் மூளும் போரைத் தடுத்தானே
இறைவன் மீதில் பற்றில்லா எளியோன் வஞ்ச அபூசகுலை
மறைவாய்க் காத்தும் அமுசாவை மதினாவுக்கும் அனுப்பிவைத்தான். 47
மசுதி எங்குள்ளான்? அறிந்து வருக
நரிபோல் வஞ்ச நெறியானின் நன்மை இல்லா நோக்கத்தைப்
புரிந்து கொண்ட புகழ்நபியார் பொல்லான் மசுதி எங்குள்ளான்?
விரைந்து சென்று கண்டறிந்து விளம்பு கென்றே ஒற்றர்களை
விரிந்த மக்கா ஊர்நோக்கி வெற்றி காண அனுப்பியவர்; 48
புவாத்து என்னும் ஊரில் இருக்கின்றான்
“நல்லான் போல நடிக்கின்ற நன்றி இல்லா மசுதி நலம்
இல்லான் தீய அபூசகுலின் இதயம் கவர நடந்திடுவான்
பொல்லான் இன்று புவாத்தென்னும் பொருந்தும் ஊரில் இருக்கின்றான்
கல்லான் அவனைக் கட்டிவரக் காலம் இதுவே” எனச்சொன்னார். 49
|