பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்313


“சாயிபு” என்பவனை அனுப்பினார்

ஒற்றர் மொழியை உற்றவுடன் ஒளியார் சாயிபு என்பவரை
முற்றும் கடமை புரிகவென முறையாய் அமர்த்தி விட்டாங்கே
மற்ற வீரர் உடன் சூழ மதினா விட்டுப் புறப்பட்டார்
சற்றும் நீரே கிடைக்காத தரையாம் புவாத்துப் போய்ச் சேர்ந்தார். 50

உலுசெய்ய நீர் கிடைக்கவில்லை

ஒருநாள் முழுதும் புவாத்துதனை உறுமுற் றுகையே இட்டவுடன்
மறுநாள் காலை உலுசெய்து மாண்புத் தொழுகை நடத்திடவே
“தருவீர் தண்ணீர்” எனக் கேட்டார் தலைமை வீரர் எங்கலைந்தும்
ஒருநீர்ச் சொட்டும் கிடைக்காத ஊரே எனவந்து ரைத்தார்கள். 51

துருத்தியைச் சாயுங்கள்

வருந்திச் சொன்ன சாபிரிடம் வாய்த்த துருத்தி தனைத்தூக்கிக்
“பொருந்தச் சாய்ப்பீர்” எனச் சொன்னார் புதுமை புரியும் பெருமானே!
அருந் தவத்தார் துருத்திதனை அதுபோல் சாய்க்க ஒருதுளிநீர்
பெருந்தவத்து முகம்மதுவின் பிழையில் லாக்கைப் பட்டதுவே! 52

நீர் வற்றாமல் வந்தது

பெருமான் பிசுமில் மறைஓதிப் பின்னர் விரல்கள் இடைவழியே
வரும்மாண் புடைய ஆறே போல் வற்றா நீரை வருவித்தார்
திருமாண் புடையோர் எல்லாரும் தீரா வேட்கை தீர்ந்தவுடன்
அருமாண் புடைய அல்லாவின் அருளின் புகழை வாழ்த்தினரே. 53

மசுதி தப்பித்துக் கொண்டான்

மூன்று நாள்கள் இவ்வாறு முற்று கையே இட்டவர்கள்
ஊன்றி வெற்றுக் கூடுதனை உறுபயனின்றிக் காத்தார்கள்
ஆண்டு மசுதி இல்லைஎனும் அந்தச் செய்தி அறிந்தவுடன்
தோன்றல் தங்கள் தோழரொடும் தூய மதினா அடைந்தார்கள். 54

மக்கா வணிகர் சாம் நகரம் போய் உள்ளனர்

மற்றும் ஒருநாள் ஒற்றர்கள் மாண்பிற் குரிய பெருமான்முன்
உற்றுச் சொன்னார், “பெருமானே! உரிய மக்கா குறைசியர்கள்
முற்றும் மணிபொன் பட்டுவகை முழுதும் கொண்டு சாம்நகரம்
சுற்றி வணிகம் புரிந்துவரச் சொல்லிப் புறப்பட்டுள்ளார்கள்; 55