அபூசல்மாவை அழைத்துச் சொன்னார்
படையை நடத்திப் புறப்பட்டால் பணியச் செய்து பெரும்பொருளை
அடைய வழியாம் எனஆங்கே அந்த ஒற்றர் கூறிட வான்
கொடையார் ஆன நபிப்பெம்மான் கோமான் அபூசல் மாதம்மைத்
தடையில் லாத கடமைஎலாம் தகவே செய்யப் பணித்தார்கள்; 56
அசீறாவை நாடிப் படை சென்றது
நூற்றைம் பதுபேர் படைவீரர் நோக்கிச் செல்ல அமுசாவே
ஆற்றல் வெண்மைக் கொடிஏந்தி அசீறா நாடிச் சென்றிடவும்
ஊற்றம் மிக்க முகம்மதுவும் ஊக்கத் தோடு போனார்கள்
காற்றின் விரைந்து சென்றபடை காத்துக் கிடந்த போதினிலும்; 57
வணிகர் சாத்து போய்விட்டது
வணிகர் சாத்து வரவில்லை வந்த ஒற்றர் முன்தோன்றிப்
பணிவாய், “ஐயா! வணிகர்கள் பாதை கடந்து போய்விட்டார்;
தணிவாய் மதீனா திரும்புவதே தக்க செயலாம்” என்றார்கள்
அணிவாய் மொழியார் முகம்மதுவும் அதனை ஏற்றுத் திரும்புகையில்; 58
ஒற்றுமை ஏற்படுத்தினார்
அசீறா வாழும் இனத்தவர்கள் அருமுத் தலசும் லமுறத்தும்
பசைஅன் பில்லா நெஞ்சத்தால் பகைத்தும் புகைந்தும் வாழ்ந்தார்கள்
இசைகொள் நெஞ்ச நபிநல்லார் இருவர் தமக்குள் பகைநீங்கி
இசைந்து வாழும் நெறிகூறி இணக்கம் மலரச் செய்தனரே? 59
குறுசு என்பவன் குற்றம் செய்தான்
குறுசு எனும்பேர் கொண்டஒரு கொடியன் மதினா புறத்துள்ள
சிறுசிற்றூர்கள் எலாம் புகுந்து சீர்கால் நடைகள் கவர்ந்துளதை
நறுமெய் வள்ளல் கேட்டவுடன் நாடிச் சென்றார் சபுவானை
உறுதீமையோன் குறுசென்பான் ஓடிச் சென்று மறைந்தானே. 60
மடலை இங்கே பிரித்துப் படிக்காதீர்
கவர்ந்து சென்ற கால்நடையைக் கருத்தாய் மீட்ட கோமகனார்
அவர்தம் அத்தை மகனாராம் அப்துல்லாவை அருகழைத்து
நவின்றார், “இந்த மடல்தன்னை நானே எழுதித் தருகின்றேன்
தவறில் பதுனுன் நகுலா போய்த் தான்இம் மடலைப் படித்திடுக. 61
|