முகம்மது முன்ஓர் அரபியான் வந்தான்
மடலில் உள்ள செய்திதனை மதித்தவ்வாறு செயல்படுதல்
கடனே என்ற பெருமானார் கவினார் மதீனா நெறி போனார்;
அடலேறு அன்னார் போம்வழிஓர் அரபியானும் முன்தோன்றி
உடலும் உளமும் ஒன்றிடவே உரைத்தான் மிக்க பணிவுடனே; 62
நபிபெருமான் போன்று உள்ளீர்கள்
“அரியோய்! மூன்று மறைநெறியும் அறிவித்ததுபோல் நபியாரை
உரிய இடங்கள் ஒவ்வொன்றும் ஓடித்தேடிப் பார்த்தலைந்தேன்
தெரிய வில்லை எவரென்று? தெளிந்தீர் உம்மைக் காணுகையில்
பெரியோர் நீரே நபிஎன்று பிழைஇல் லாமல் நினைக்கின்றேன் 63
புதுமை ஒன்று புரிக என்றான்
“தங்கள் அருமை யான்காணத் தக்க புதுமை புரிக” என்றான்
அங்கவ் அரியோர் அவ்வாறே “அரபி யானே! அம்மரத்தை
இங்கே வாஎன் றியம்புகநீ” என்றார்; அவனும் அதுகூற
வெங்கான் மரமும் வேரோடு விலகிச் சென்றங் கவன்முன்னே! 64
அரபியான் காலில் விழுந்தான்
விரும்பிச் சலாமும் விளம்பியது விழைந்து கலிமா ஓதியதே
அருமை மரத்தின் செயல்கண்ட அரபி விரும்ப அம்மரத்தை
உரிய இடத்தில் செலச் சொன்னார் உடனே மரமும் சென்றதுவே
பெருமை கண்ட அரபியான் பெரியோர் காலில் விழப்போனான்; 65
கடவுள் பாதத்தையே வணங்க வேண்டும்
“தூய கடவுள் முன்னன்றித் தொழவே விழுதல் கூடாது
ஆய கடவுள் அடிகள்தாம் அரிய புணையாம்” என்றார்கள்
நேய மகனும் நபித்தாளை நெருங்கி ஒற்றி முத்தமிட்டான்
வாய்மை நெறியார் விடைபெற்று மதினா நோக்கிப் புறப்பட்டார். 66
“குறைசியரைத் தாக்குக” என்றிருந்தது
வள்ளல் நபியார் ஆணைவழி வந்த அப்துல் லாஅன்பர்
உள்ள தோழர் எண்மருடன் ஊர்நகுலாவின் பொழிலடைந்தே
உள்ளம் விரும்பித் தந்தமடல் உடனே பிரித்துப் படித்தார்கள்
“எள்ளும் குறைசி இனத்தவரை எதிர்த்துத் தாக்கி வந்திடுக” 67
|