| 
      அமுறுவை வெட்டி வீழ்த்தினர்
      
       
      என்னும் கருத்தைப் படித்தவர்கள் இனியர் அல்லாக் குறைசியரை 
      முன்னே தடுக்கும் முயற்சியுடன் முனைந்து நின்று தாக்கினரே 
      அன்ன வர்க்குள் அமுறு தனை அறுத்துத் தள்ளி வீழ்த்திவிடப் 
      பின்னர் இருந்த எல்லாரும் பிழைத்தோம் என்றே தப்பித்தார்;		68
       
      
      பொருளைக் கொண்டு வந்தனர்
       
      
      மக்கா வணிகர் பொருளை எலாம் மதினா வீரர் கவர்ந்தார்கள் 
      அக்கால் எதிர்த்த இருவர்தமை அடிக்கால் கட்டிக் கொணர்ந்தார்கள் 
      “தக்கார் போற்றும் நாயகமே! தந்தோம் வெற்றிப் பொருளோடு 
      புக்கோர் எல்லாம் புறங்காட்டிப் போனார்” என்றார் மகிழ்வோடே!	69
       
      
      நோன்பு செயும் நாளில் போரை நடத்தலாமா?
       
      
      வல்லார் நபியார் அது கேட்டு வருந்திச் சொன்னார், தோழர்களே! 
      நல்லோர் நோன்பு செயும்நாளில் நலியப் போரை நடத்துவதோ? 
      புல்லார் எனினும் பொருந்தாத போரே செய்து வந்தீர்கள் 
      எல்லாப் பொருளும் கிடக்கட்டும்” என்றே அவற்றைத் தொடவில்லை;	70
       
      
      அல்லாவை மதியாப் பாவம் பெரிதே
       
      
      “புனிதத் திங்கள் போரை விடப் பொல்லாப் பாவம் அல்லாவை 
      மனிதர் மதியாப் பாவம்தான் மண்ணில் கொலையை விடக் கொடிதாம்” 
      எனும்நல் தெய்வ உரை வரவே ஏந்தல் மகிழ்ந்து பொருளைஎலாம் 
      கனிந்த மனத்தால் பங்கிட்டுக் கலந்த வீரர்க்கு அளித்தாரே!			71
       
      
      பொன் கொடுத்து வீரர்களை மீட்டனர்
       
      
      கட்டிக் கொணர்ந்த வணிகர்களைக் காக்க நினைத்த மக்கத்தார் 
      தட்டித் தட்டி அணிசெய்யும் தங்கம் தந்து மீட்டார்கள் 
      ஒட்டி இருந்த நபித்தோழர் ஒளிசெய் மதினா வாழ்பவர்கள் 
      மட்டில் லாத பெருமைமிகு மகம்மதென்றே போற்றினரே!			72
       
      
      ***
    |