4. களம் புகல் காண்டம்
1. பதுறுப் போர்ப் படலம்
மக்காவில் பகைவர் மனம் புழுங்கினர்
வல்லான் இறைவன் வகுத்தளித்த வாய்மை நெறியாம் திருக்குர்ஆன்
பல்லார் உளமும் புகுந்தொளியே பரவச் செய்தார் முகம்மதுவே;
பொல்லா நெறியே நலமென்று பொறாமை கொண்டு வினைசெய்யும்
புல்லார் மக்காப் பெருநகரில் பொருந்திப் புகைந்து கருகினரே. 1
இறைவன் புனித நோன்பை அறிவித்தான்
இனியார் மதினா அடிவைத்த இரண்டாம் ஆண்டில் “இறையவனின்
புனித நெறியின் புகழ்கண்டோர் பொருந்தச் செய்யும் நோன்பதனைப்
பனிசூழ் “ரமலான்” மாதமெலாம் பகலில் பசித்தும் இரவெல்லாம்
இனிதாய் இறைவன் புகழ்நினைந்தும் இயற்றல் கடமை”எனச்சொன்ன;2
நோன்பியற்றினர்
கடவுள் ஆணை அது கேட்டுக் களித்த பெருமான் முகம்மதுவும்
அடலேறன்ன அபூபக்கர் அலீயார் உமறும் உதுமானும்
உடலும் உளமும் ஒருங்காக உணர்வும் பொருந்த நோன்பியற்றிக்
கடன்செய் பதினே ழாம் நாளில் கனிந்த வெள்ளிப் பகற் போதில்; 3
ஒற்றர் வந்து கூறினார்
ஒற்றர் பசுப சாவென்பார் ஒளிமெய்க் கோமான் முன்வந்தே
உற்ற அமைதி உருவாக உரைத்தும் இறைவன் தனைநினைந்தும்
“நற்ற வத்தீர்! நீர்என் பால் நவின்ற வாறு யான் சென்றேன்;
உற்ற முறையில் ஒற்றாடி உரைக்க வந்தேன்” எனத் தொடர்ந்தார். 4
|