பக்கம் எண் :

318துரை-மாலிறையன்

மக்கா வணிகர் சாம் நகர் அடைந்தார்கள்

“செல்வம் மிக்க மக்காவின் சில்லோர் வணிகப் பெருமக்கள்
நல்வான் உடுக்கள் போல்மின்னும் நவைஇல் லாப்பொன் மணியோடும்
வெல்வான் வணிகம் புரிந்துவர விரும்பி நகர் “சாம்” அடைந்தார்கள்
பல்வான் புகழ்கொள் பொருளீட்டிப் பகுத்தும் வகுத்தும் தொகுத்துமதை; 5

மக்காவுக்குத் திரும்புகிறார்கள்

சுமையாய் விலங்கின் முதுகேற்றிச் சுடர்ப்பொன் மக்கா வருகின்றார்
அமையாத் தீய அபாசுபியான் அவனோ டுற்ற நாற்பதுபேர்
நமையார் மிஞ்ச இருக்கின்றார் நாட்டில் செல்வர்? எனப் பேசித்
தமையே தருக்கி வருகின்றார் தகையீர்!” என்றார் அவ்வொற்றர்; 6

போருக்குப் புறப்படுங்கள்

நம்பற் குரியார் தம்மிடத்தில் நவின்ற மொழியைக் கேட்டவுடன்
செம்பொன் முகத்தார் முகம்மதுவும் சிறந்த தங்கள் தோழர்களைத்
தம்பால் அழைத்துத் “தகவுடையீர்! தானை நடத்திப் புறப்படுவீர்!
அம்பால் ஈட்டி கத்தியினால் அவரை மடக்க” என உரைத்தே; 7

பொறுப்புகளை ஒப்படைத்தார்

சேயார் அபாலு பானாவை “செங்கோல் ஆட்சி புரி”கென்றார்;
நேய உம்மி மகதூமை, “நிலைத்த தொழுகை செய்”கென்றார்;
ஆய பணிகள் எவைஎவையோ அவற்றை உரியார்க்கு ஒதுக்கிட்டார்
தூய இறைவன் துணை வேண்டித் தொழுகை நடத்தும் அரியோரே 8

முந்நூற்றுப் பதினான்கு பேர் திரண்டனர்

மூன்று நூறும் பதினான்கும் முழுமெய் வலிமைப் படைவீரர்
தோன்றல் முன்னே அணிவகுத்தார் தொடங்கும் போர்க்குப் பொருந்திடுமெய்
ஊன்று கத்தி வேல் ஈட்டி உடைவாள் வில் அம்பு உறுநண்பர்
போன்று மெய்யைக் காக்கின்ற புகழ்க் கேடயமும் அணிந்தார்கள். 9