பெரும்படை புறப்பட்டது
கொடியை ஏந்தி நடந்தார்; பின் குடையை ஏந்தி நடந்தார்கள்;
முடியை அணிந்த மன்னர்போல் முடுகிச் செல்லும் வீரர்தம்;
அடியை ஒட்டி அல்லாவின் அருளைப் புகழ்ந்து சென்றார்கள்
இடியை நிகர்த்த ஒலிஓங்கி எங்கும் புழுதி கிளம்பியதே! 10
அபாசுபியான் செய்தி அறிந்தான்
ஒப்பில் லாத இறையவனின் உற்ற துணையால் படைகூடித்
தப்பில்லாத முகம்மது கோன் தலைமை ஏற்று வந்ததெனச்
செப்பும் ஒற்றர் தாம் வந்து செய்தி யாகச் சொலக் கேட்டுத்
தப்பார் வணிகத் தலைமகனாம் தகுதி இல்லான் அபாசுபியான் 11
முகம்மதுவை எதிர்க்க முடிவு செய்தான்
ஈட்டி வந்த பொருளை ஓர் இடத்தில் வைத்துப் பதுக்கியபின்
“கூட்டி வந்தான் பெரும்படையைக் கொள்ளை மனத்தான் முகம்மதுவே
மாட்டிக் கொண்டு விழிக்கின்றோம் மக்கா வினரே! உடன் வந்தே
ஓட்டி விடுங்கள் எமக்கேற்ற உதவி செயுங்கள்” எனும் செய்தி; 12
அபூசகுல் நெறிப்படி வாழ்வோர் கொதித்தனர்
எழுதி ஓலை அனுப்பிடவே ஏற்ற மக்கா நகர்வாழ்வோர்
முழுதும் தீய அபூசகுல்தான் மொழியும் வழியில் நடப்போர்கள்
தொழுகை தந்த முகம்மதுவின் தூய பெயரைப் படித்துடனே
கழுதை போலக் கனைத்தார்கள் காட்டெருமைபோல் குதித்தார்கள்; 13
அபூசகுல் கொதித்து எழுந்தான்
“கொழுத்த பொருளைத் தான் விரும்பிக் கொள்ளைஇடவா வந்துள்ளான்?
கழுத்தில் குறியைக் காட்டி நமைக் கலக்க வந்த கயவனவன்;
பழுத்த கனிபோல் பேசுபவன் பாதை மறித்து வந்தானாம்
பிழைத்துப் போக விட்டுவிடில் பிழையே” என்றான் அபூசகுலே; 14
முகம்மதுவைப் பழித்தான்
மக்கா மக்கள் தமைநோக்கி மார்பு தட்டிப் பேசியவன்
“இக்காலத்தில் ஏமாந்தால் இவன்நம் தலைமேல் ஏறிடுவான்;
கொக்கரித்துப் பேசி இங்குக் குந்தி இருந்தால் பயனில்லை;
மக்காள்! எழுக போர்க்”கென்று மகம்மதுவையே பழித்தானே. 15
|