ஆயிரத்தெண்பது வீரர்கள் திரண்டனர்
உமையா சைபத்து உதுபத்தை ஒட்டி வந்த வீரர்கள்
அமையா தெழுந்த அபூசகுலின் அடியை வந்து பணிந்தார்கள்
திமிர்கொண்டாயிரத்தெண்பஃது தீயோருடனே கலந்தார்கள்
உமிழ்வாய்க் குதிரை ஒட்டகமும் ஓங்கு படையும் கொண்டார்கள். 16
இறைவன் முகம்மது பக்கம் இருந்தான்
ஒன்றுக் கொன்றே என எதிர்த்தால் ஓங்கும் வீரம் எனலாகும்;
ஒன்றுக் கிங்கே மூன்றாக ஒவ்வா முறையில் நின்றார்கள்;
என்றும் நல்லோர் பக்கத்தில் இருக்கும் இறைவன் முகம்மதுவின்
நன்றாம் கொள்கை வென்றிடவே நல்கும் உரையால் துணைசெய்தான் 17
ஏதேனும் ஒரு பக்கம் வெற்றியை அருள்கிறோம்.
கடவுள் துணையால் களம்புகுந்த கருணை வள்ளால்! இக்காலம்
படரும் பகைகள் இரண்டாகப் பக்கத் திருக்கும் வெற்றி இங்கோர்
இடமே அடைய அருள்கின்றோம் எண்ணித்துணிக” எனும் உரையே
தொடரக் கொண்டே கோமகனார் தோழரோடும் ஆராய்ந்தார். 18
அருளா? பொருளா?
“ஒருபக்கத்தில் அபாசுபியான் உறுபொன் கொண்டு நிற்கின்றான்;
மறுபக்கத்தில் அபூசகுலும் மதிக்கா திறையை வெறுக்கின்றான்;
பொருளும் அருளும் நம்முன்னே போட்டி இடவே காண்கின்றேன்
இரண்டுள் எதனைப்பெற வேண்டும் எண்ணிச் சொல்க” எனக்கேட்டார்.19
தோழர் பொருளே வேண்டுமென்றனர்
“பொருளே வைய வாழ்வுக்குப் பொருந்தும் உறவும் உருவாக்கும்
பொருளல் லவரைப் பொருளாக்கிப் புகழுண்டாக்கும் அறம்பயக்கும்
தரும் சீர் இன்பம் பகைநீக்கும் தலைமை அளிக்கும்; அதனாலே
பொருளே வேண்டும்” எனத்தோழர் புகன்றார் ஐயன் திருமுன்னே 20
எல்லாம் அறிந்தவர் நீர்
மற்றை வீரர் எல்லாரும் “மண்மேல் அருள வந்தவரே!
உற்றவெல்லாம் அறிந்தீர் நீர் உமக்குச் சொல்ல ஒன்றுளதோ?
குற்றமில்லா நெறிநடத்தும் கொள்கை கொண்டீர் எம்முயிரை
முற்றும் விடவே மொழிந்தாலும் முன்னே நிற்போம்” என்றாரே. 21
|