பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்321


அருளே வேண்டும் என்றார்

அருளை வழங்கும் தீன்நெறியை அழிக்க வந்தான் அபூசகுலே;
இருளைப் போக்கும் ஒளிநெறிதான் இசுலாம் எனவே அறியாமல்
பொரவந்தானைக் காபிர்களைப் பொருது வெற்றி காணுவதே
அருள்வான் நபியார் கருத்தாக அன்பர் முன்னே தெரிவித்தார். 22

அருளே வேண்டிப் போர்மேல் சென்றார்

இதுவே தக்க முடிவென்றே ஏற்ற மற்ற வீரர்களும்
புதுநல் ஊக்கம் மிக்கவராய்ப் “போர் போர்” என்று குதித்தார்கள்;
குதிரை வீரர் ஒட்டகத்தின் கூனார் முதுகின் வீரர்கள்
எதிரிப்படைகள் இடம்தேடி இறையைப் புகழ்ந்து பறந்தார்கள். 23

முகம்மது இறைவன் முன் வேண்டினார்

மறவர் எல்லாம் துள்ளுகையில் மதினா வேந்தர் முகம்மதுவோ
“உறவால் இறைவன் அல்லாவின் ஒளியை வேண்டி, “எம் அல்லா!
திறவா நெஞ்சர் உம் புகழைத் தேறாப் புல்லர் திருமறையாம்
இறவா நெறியைப் பொய்யென்பார்; எனைஉன் தூதன்இலை என்பார்; 24

பகையைச் சாய்க்க அருள்வாய்

இழிவு படுத்தும் காபிர்கள் எதிர்போர்க்களத்தில் நிற்கின்றார்
எழிலோய் அவர்தம் வலிமையினை எதிர்த்துச்சாய்க்கும் உறுதியினைப்
பழிகள் நேரா வண்ணத்தில் பரிந்து தருவாய்” எனக்கேட்டுப்
பொழியும் அன்பு மனவேந்தர் புனிதத்தொழுகை மேற்கொண்டார்; 25

அபூசகுலும் ‘குபல்’ முன் வேண்டினான்

குறைசியர்கள் படைத் தலைவன் கொடிய மனத்தான் அபூசகுலும்
“இறைவா!” என்றான் “குபல்” முன்னே “இருக்கும் நந்தம் மரபுகளைக்
குறைவு படுத்தி எப்பொழுதும் குற்றம் புரியும் முகம்மதுவை
உறைவாள் கத்தி யால்வெட்ட உதவு” கென்று வேண்டி நின்றான்; 26

சைபத்து அமுசாவைப் பழித்தான்

கைபத் துள்ள மாந்தன்போல் கத்தி சுழற்றி வந்தவனாம்
சைபத் தென்னும் பேர்கொண்டான் சாகாவரத்தான் போல் தோன்றிப்
பொய்ப் பற்றான் அபூசகுலின் புகழே பேசி ஆர்ப்புற்று
மெய்ப் பற்றாளர் அமுசாவின் மிகு வீரத்தைப் பழித்தானே! 27