உதுபத்து மறைந்தான்
வடிந்த செந்நீர்ப்
போர்க்களத்தில் வாகை சூட இயலாமல்
மடிந்தான் உதுபத் தெனக் கேட்ட மமதை கொண்ட அபூசகுலோ
ஒடிந்தான் மனமே என்றாலும் ஒருங்கு சேர்த்த படையோடும்
முடிந்த அளவில் போர் செய்தான் மொட்டை மரம்போல்
தனிநின்றே. 34
முகம்மது கைப்பிடி மண்
எடுத்தார்
“கொன்றேவிடுவேன் முகம்மதெனும் கோள் அரிமாவை” எனும்நரிபோல்
சென்றே நின்ற அபூசகுலின் சிறுமைப் படைமுன் பெருமானார்
ஒன்றே ஆன தெய்வத்தின் உற்ற புகழே உளம் வைத்து
நன்றே புரிக” எனக் கூறி நற்கைப் பிடிமண் தான்
எடுத்தார்; 35
பகைவர் ஆண்மை இழந்தனர்
தன்னே ரில்லாத் திருமறையைத்
தகவாய் ஓதிக் காபிர்கள்
முன்னே வீசி எறிந்தார்கள் முழுப் போர்க்களத்தில் அம்மண்ணே
ஒன்னார் முகத்தைக் கண் வாயை ஒட்டி உறுத்தி அச்சுறுத்த
அன்னார் திகைத்து நடுநடுங்கி ஆண்மை இழந்து தோற்றனரே. 36
எழுபது பேர் சிறைப்பட்டனர்
தோற்ற படையின் வீரர்
பலர் தொலைவில் ஓடி மறைந்தார்கள்;
ஆற்றல் இழந்த எழுபது பேர் ஆங்கே சிறைக்கண் பட்டார்கள்;
நோற்ற நபியார் சிற்றப்பா நுவல்சீர் அலீயின்
முன்னவனாய்ப்
போற்றும் உக்கையில் தானும் புகல்நௌ பலுமே
பிடிபட்டார். 37
பதினான்கு முசுலீம்கள்
உயிர்விட்டனர்
முசுலிம் படையில் உயிர்
துறந்த முகிழ்பதினான்கு வீரர்தம்
பசிய உடலைப் பணிவுடனே பாங்காய் எடுத்துப் புதைத்தார்கள்
இசைஇல்லாத அபூசகுலோ இரத்த வெள்ளம் புடைசூழ
அசைவில்லாத பிணம் போல ஆங்கே கிடந்தான்
அவ்விரவே! 38
அபூசகுல் குற்றுயிராய்க்
கிடந்தான்
செம்மைக்குருதிக் கடல்காணச்
செங்கதிரோன் கீழ்த்திசை எழுந்தான்
செம்மல் நபியார் ஆணைவழி சீர்மசுஊது துணைவருடன்
வெம்மையான போர்க்களத்தின் விளைவைச் சுற்றிப் பார்த்தார்கள்
“அம்மா! அம்மா” எனமுனகி ஆங்கே கிடந்தான்
அபூசகுலே! 39
|