பக்கம் எண் :

324துரை-மாலிறையன்

மசுஊது அருகில் சென்றார்

உதுபத்து ஒலீது சைபத்தும் உமையா உமாறா உக்குபாவும்
சிதைவே உற்றுப் பிணமாகிச் சினப்போர்க் களத்தில் கிடந்தார்கள்
சதையில் புண்கள் உற்றவனாய்ச் சாய்ந்து கிடந்த அபூசகுலை
மதித்துச் சென்று மனம் கனிந்து மசுஊது அருகில் நின்றாரே! 40

மேலோரைப் பகைக்காதே!

“காலம் எல்லாம் தீநெறியே கணக்கே இன்றிச் செய்தாய் நீ
மேலும் மேலும் திருந்தாமல் மேன்மை யாரைப் பகைக்கின்றாய்
நாலும் தெரிந்த உரவோனே! நான்என் இனியும் சொல்லுவதோ?
காலும் கையும் செயலின்றிக் காட்டில் ஈங்கே கிடக்கின்றாய்” 41

இசுலாம் நெறியைப் பின்பற்று

“இதயம் மாறி இனியேனும் இசுலாம் நெறியைப் போற்றிக் கொள்
இதற்கு முன்னே செய்தபிழை எல்லாம் மறப்பான் நம் இறைவன்
முதலோன் அல்லா முன்நின்றால் முதன்மை பெறுவாய்” என வீரர்
பதமாய் உரைத்தார் அது கேட்டுப் பாவமைந்தன் சினம் கொண்டே; 42

தாழ்வுற்றுக் கலிமா ஓதுவேனோ?

என்வாழ் வெல்லாம் கொள்கைக்கே என்று வாழ்ந்து வருகின்றேன்
புன்வாழ்க் கைக்கே வழிகாட்டும் புகழில்லாத முகம்மதியன்
தன்வாய்ச் சொல்லை நம்பிஇந்நாள் தாழ்ந்து கலிமா ஓதுவனோ?
நின்வாய்க் கொழுப்பால் பேசுகிறாய் நேரில் நிற்கும் வலிபெற்றாய்; 43

வெட்டிக் கூறாய்ப் போட்டாலும் நான் மாற மாட்டேன்

பகலில் காக்கை வென்றுவிடும் பாவம் கூகை முன்வந்தால்
தகுநல் இரவில் என்னாகும்? தகுதி அறியா துரைசெய்தாய்;
பகுதி பகுதியாய் மெய்யைப் பகுத்துக் கூறாய்ப் போட்டாலும்
தகுதி இல்லா முகம்மதுமுன் தாழ்ந்து நிற்கத் துணிவேனோ? 44

கழுத்தைக் காட்டினான் அபூசகுல்

அறப்போர் முறையின் நெறிப்படியே அடங்கிச் சாய்ந்து கிடக்கின்றேன்
முறைப்படியே நீ என்னுடலை முழுதும் கொன்று வெற்றி பெறு
கறைவாய்ப் படியேன்” எனக்கூறிக் கழுத்தைக் காட்டி அபூசகுலாம்
குறைசித் தலைவன் கூறியபின் குற்றம் இல்லா அவ்வீரர். 45