சவீக்கு என்னும் இடத்தில்
படைதங்கியது
புவிக்கு நிழலாய் வந்துள்ள பொன்னார் ஒளிச்சீர் முகம்மதுவை
அவிக்க என்னும் மனத்தினொடும் அபாசுபியான்தன் படைநடத்திக்
குவிக்கும் வீரப் பாசறையைக் கொடிமுன் பறக்க அமைத்திட்டான்
“சவீக்கு”ப் பேரில் அமைந்தவொரு தகும்சீர் இடமே
அதிர்ந்திடவே! 6
மசுக்கம் என்பான்
உதவினான்
ஒற்றன் போல உருமாற்றி உற்ற மதினா நகர் புகுந்து
மற்றோர் அறியா வகை திரிந்து மசுக்கம் என்பான்
மனமறிந்து
கற்றோர் போற்றும் முகம்மதுவைக் கவிழ்க்க நினைத்தான்
அபாசுபியான்
நற்ற வத்தார் நபியாரோ நரியான் செயலை அறிந்தாரே! 7
செய்தி அறிந்த பெருமான் படை
நடத்திச்சென்றார்
வல்லார் அபாலு பானாவை வகையால் ஆளக் கூறிஉடன்
வெல்லும் வீரர் படை நடத்தி விரைந்தார் தீயோன் அஞ்சிடவே
எல்லார் தமக்கும் இரங்குகிற இசுலாம் கோமான் கறுக்கறாவில்
உள்ளார் என்னும் செய்திதனை உற்ற அபாசு பியான்
அதிர்ந்தான்; 8
அபாசுபியான் அஞ்சி
ஒடினான்
இரவில் உலகைச் சூழ்ந்தபனி
எல்லோன் வரவால் விலகுதல்போல்
கரவில் தோய்ந்த அபாசுபியான் கறுக்கறாபின்
நிலை அறிந்து
விரைவில் வீரர் படையோடும் விலகி ஓடிப்புறம் போனான்
உரையில் மட்டும் வீரம் வைத்(து) ஊர்மக்கள்பால்
உரைத்தோனே! 9
எல்லாப் பொருளையும் விட்டு
ஓடினான்
ஓடிப் போகும் பதற்றத்தில் உரிய எந்தப் பொருள்தனையும்
நாடி எடுத்துப் போகாமல் நாணம் இல்லான் அபாசுபியான்
கோடி கோடி யானபொருள் குவையைச் சவீக்குப் பாசறையாம்
பாடி வீட்டில் வைத்தபடி பதுங்க ஓடிப் போய் விட்டான். 10
கிடைத்த பொருளை வீரர்களுக்குப்
பங்கிட்டார்
மறவர் படையை உடன்கொண்டு மகம்மது இனியார் பகைஇடத்தின்
புறமும் உள்ளும் போய்ப் பார்த்துப் பொல்லான் தன்னைத் தேடிடவும்
அறத்தின் பகைவன் அபாசுபியான் ஆங்கே விட்ட
பொருள்களெலாம்
சிறக்க எடுத்து வீரர்தம் சிந்தை மகிழ அளித்தார்கள். 11
|