பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்329


மாவு மூட்டைகளே அதிகம் இருந்தன

அளித்த பொருள்கள் தமக்குள்ளே அதிக மாக இருந்தனவோ
விளைத்த மாவு மூட்டைகளாம் விளைந்த இந்தக் காரணத்தால்
மலைத்த இந்தப் போர் தன்னை மாவுப் போரென் றழைத்தார்கள்
வளைத்த போரில் முகம்மதுவே வாய்த்த வெற்றி சூடினரே! 12

அபாசுபியான் தீமை தொடர்ந்தது

இசுலாம் நெறி வளர்ந்தது

அஞ்சி அகன்ற அபாசுபியான் அழிவை நாடும் மனத்தானாய்
எஞ்சாத் தீமை பலசெய்தும் எதிர்ப்பட்டாரைக் கொலைசெய்தும்
வஞ்சம் மாறா திழிவுற்றான் வள்ளல் பெருமான் மதினாவில்
மிஞ்சு புகழ்சேர் தீன்இசுலாம் மேலும் செழிக்க வளர்த்தார்கள். 13

குதிரிப் போர்

குதிரி மக்கள் தீவினை செய்தார்

பொன்னார் மதினா நன்னகரின் பொருந்து திசையாம் தென்கிழக்கில்
ஒன்னார் பலர்வாழ் ஊர் உண்டாம் உறுபேர் குதிரி ஊர்வாழ்நர்
இன்னார் ஆனார்; முகம்மதுச்சீர் இயம்பு வோரை நேர் கண்டால்
அன்னார் வாட அருந்துன்பம் அடையச் செயும்தீ வினை உடையார்; 14

எங்களைக் காப்பாற்றுக

வந்தார் எல்லாம் முகம்மதுமுன் வருந்திச் சொன்னார்; புண்பட்டு
நொந்தார் எல்லாம் அண்ணல்தாம் நோகச் சொன்னார்; செங்குருதி
சிந்தா வந்தார் செம்மல்முன் செப்பி வருந்திச் சென்றார்கள்;
எந்தாய்! எந்தாய்! காக்கவென இரங்கிச் சென்றார் பல்லோரே! 15

பனீசுலைம் குலம் அழியும்

முறை இட்டவர்கள் துன்பத்தை முழுதும் போக்க நினைத்தண்ணல்
இறைவன் இட்ட ஆணையினை இயற்ற நினைத்த நல்லோர்க்குக்
குறைசெய் பனீசு லைம்குலமே குலைந்து போகும் எனக்கூறிக்
கறைவிட் டெழுந்த மதியைப்போல் கதிர்விட் டெழுந்தார் முகம்மதுவே! 16

இபுனு உம்மி மகதூம் ஆளப்பணித்தார்

இணையில் லாத செம்மறவர் இபுனு உம்மி மகதூம் தாம்
துணையாய் இருந்து மதினாவைத் தூணாய் இருந்து காக்கவெனக்
கணையும் ஈட்டி கத்தியதும் கையில் ஏந்தி நபிபெருமான்
அணைவிட் டெழுந்த வெள்ளம்போல் ஆங்கே எழுந்து முன்சென்றார். 17