பக்கம் எண் :

330துரை-மாலிறையன்

பகைவர் சிதறி ஓடினர்

தூயர் படைதான் எதிர்வருமுன் தூசுப் படையை முன்கண்ட
தீயர் படையோ நடுநடுங்கித் திசைக்கொவ் வொன்றாய் ஓடியதே
நேயர்படைசூழ் இறைதூதர் நெருங்கி வந்து காணுகையில்
ஆய பனீசுலைம் குலத்தார் அடியின் சுவடும் ஆங்கில்லை; 18

நல்ல செல்வம் கிடைத்தது

ஆடு மாடு முதலாக அரிய பாலை ஒட்டகத்தின்
பீடு மிக்க குதிரைகளின் பெருங் கூட்டத்தைக் கண்டார்கள்
பாடு பட்டுத் தேடியதைப் பகைவர் விட்டுச் சென்றதனால்
நாடு காக்கும் நம்மோர்க்கு நல்ல செல்வம் கிடைத்ததென; 19

வீரர்கள் செல்வம் சுமந்து சென்றனர்

வீரர் எல்லாம் மகிழ்ந்திடவே வெற்றி வேந்தர் நபிபெருமான்
நேரில் வழங்கிச் சிறப்பித்தார் நிறைவாய்ப் பெற்றார் அல்லாவின்
பேரை வாழ்த்தி முகம்மதுவின் பிழையா நெஞ்சை மிக ஏத்தி
ஊரை நோக்கிப் போனார்கள் உற்ற செல்வச் சுமையோடே! 20

தீயமுறுப் போர்

அபாசுபியான் பொருளோடு வருகிறான்

கொடுமை மனத்தான் அபாசுபியான் கொழுத்தசெல்வக் குவைகொண்டு
கடுமுட் காடும் பாலைகளும் கடந்து ஈராக்கு நாடேகி
எடுத்த வணிகப் பொருளேந்தி எழிலார் மக்கா வருகின்றான்
தடுத்து நிறுத்தி அவன் பொருளைச் சயதே! வாரி வருகென்றார்; 21

படை தீயமறுவில் தங்கிற்று

ஆணை இட்ட முகம்மதுவின் அடியைப் போற்றிச் சயது நல்லார்
தூணை ஒத்த தோளுடைய தூய வீரர் துணைபெற்று
வானை வாழ்த்தித் “தீயமறு” வந்து தங்கி இருக்கையிலே
தீனைப் பழிக்கும் அபாசுபியான் திரும்பி வந்து கொண்டிருந்தான்; 22

அபாசுபியான் தப்பினான்

தக்க வேளை வந்ததெனத் தலைவர் சயது படையோடு
மிக்க செல்வத் தொடு வந்த மேன்மை இல்லா நெறியோனைச்
சிக்கல் சிலந்தி ஈயாக்கிச் செல்வம் எல்லாம் தாம் கொண்டார்
அக்கால் அவனோ தப்பித்தே ஆங்கே இருந்து புறம்போனான். 23