பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்331


முகம்மது செல்வத்தை வழங்கினார்

கொழுத்த செல்வக் குவை கவர்ந்த கொள்கை நல்லார் சயதுவுடன்
கழுத்துப் பின்னே குறியுடைய கவினார் தூதர் முன்வந்து
பழுத்து வீழ்ந்த செல்வமெனப் பணிவாய்க் காட்டிச் சொன்னார்கள்
எழுத்துக் கடங்காப் புகழ் வேந்தர் எளியோர்க் கவற்றை வழங்கினரே! 24

அபீறாபிகு தன் அழிவு

பொல்லாதவன் தீயன்

பொல்லான் அபீறா பிகுவென்பான் பொய்யன் தீயன் புலைநெறியன்
நில்லான் நல்லோர் முன்னிலையில் நிறையும் நாணும் இல்லாதான்
வல்லான் கள்ளக் கொலைவினையில் வாட்டிவதைக்கும் பண்புடையான்
புல்லான் நெஞ்சில் புகழில்லான் பொருந்தா வினையே புரிபவனாம்; 25

விலங்கினும் கொடியவன் அபிறாபிகு

எள்ளத் தனையும் இரக்கமிலா எண்ணக் கொடியோன் என்றென்றும்
தெள்ளத் தெளிவாய்க் கொடுஞ்செயலே தேர்ந்து செய்யும் உணர்வுடையான்
வெள்ளத் தனைய பாவங்கள் விரும்பிச் செய்வான் விலங்கினும்பாழ்
உள்ளத் தினையும் பெற்றவனாய் உலகில் திரிந்தான் கொடுங்கயவன்; 26

இவனே தீமைக்கு ஊற்றானான்

அல்லா நெறியார் அனைவரையும் அடக்கி ஒடுக்கி மகிழ்ந்திடுவான்
கல்லாக் காபிர் இனத்தார்க்குக் கனிவு காட்டும் பண்புடையான்
வல்லார் முகம்மது ஒளியாரை வசைச் சொல்லாலே இகழ்ந்திடுவான்
எல்லாத் தீய பண்பிற்கும் இவனே ஊற்றாய் நிலைநின்றான்; 27

பொறுமைக்கும் எல்லையுண்டு

பாம்பின் கொடியான் அபிறாகு பண்ணும் தீய கொடுமைகளைப்
பூம்பொன் மேனிப்புகழ் நல்லார் பொறுத்துப்பொறுத்துப் பார்த்ததன்பின்
ஆம்புன் நெஞ்சன் அழிவதுவே அல்லாவுக்கும் விருப்பென்று
கூம்பா நெஞ்ச அப்துல்லா கொள்கைக் கோனை அழைத்தார்கள். 28

இசுலாம் நெறிக்கு இதுவே உதவி

விரைந்து போவீர் வீரருடன் விழைந்து சோலை காபிறுக்குள்
மறைந்து மறைந்து சென்றிடுவீர் மாண்பில் அபீறா பிகுஇருப்பான்
உறைந்து போகும் அவன்குருதி உதிரக்கொன்று திரும்பிடுவீர்
நிறைந்த இசுலாம் நெறியார்க்கு நிலைத்த உதவி இஃதென்றார்; 29