மைந்தர்களும் அன்னை சொல்லைப் போற்றினர்
அன்னையவர் சொன்னதனை அருமறையாய்
உளத்தெண்ணி அரிய மைந்தர்
மன்னியசீர் பெருமானை முகம்மதுவாம்
கோமானை மலர்போல் ஏந்திப்
பன்னருஞ்சீர் ஆடுகளைப் பக்குவமாய்
மேய்த்ததன்பின் பரிவு காட்டும்
அன்னையரின் முன்வந்தார் அன்றாடம்
அண்ணலவர் அருமை கண்டே! 7
வளம் பெருகி வாழ்ந்தார்கள்
ஆடுகளும் அளவின்றிப் பெருகினவே
அலிமாவின் அரிய செல்வம்
பீடுயர்ந்து பெருகினவே முகம்மதுவின்
பெருமைமிகு பாதம் பட்ட
காடுயர்ந்து செறிந்ததுவே கனிமலிந்து
பொலிந்தனவே கரைகொள் கால்வாய்
மேடுயர்ந்து நீருயர்ந்து பெருகுநலப்
பயிருயர்ந்து மேன்மை கொண்டார்; 8
ஆயர்குலச் சிறுவரின் பெருமை
தீயமனம் இல்லாத சிறப்புடைய
குலத்தவராய்ச் சிறந்து வாழும்
ஆயர்குலச் சிறுவரொடும் அருள்மகனார்
அன்புபொழிந் தாடிப் பாடித்
தோயமதுப் பாலருந்திச் சுவையுடைய
கனியருந்தித் தொடர்ந்து நெஞ்சில்
நேயமுடன் வளர்ந்திங்கு நீக்கமற
விளையாடும் நிறைநன் னாளில்; 9
|